தமிழ்நாடு

விவசாய தம்பதியர் இரட்டைகொலை வழக்கு.. 4 பேர் கைது!

ஈரோடு மாவட்டம் சிவகிரியில் வயதான விவசாய தம்பதியினர் இரட்டை கொலை வழக்கில் நகைகளை உருக்கி கொடுத்த நகை வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இவ்வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஜூன் 2 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  விவசாய தம்பதியர் இரட்டைகொலை வழக்கு.. 4 பேர் கைது!
விவசாய தம்பதியர் இரட்டைகொலை வழக்கு.. 4 பேர் கைது!
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகேயுள்ள மேகரையான் தோட்டத்தில் தனியாக வசித்து வந்த ராமசாமி மற்றும் அவரது மனைவி பாக்கியம் ஆகியோர் கொலை செய்யப்பட்ட நிலையில், மே 1 ம் தேதி அவர்களின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. மேலும் போலீசார் விசாரணையில், மூதாட்டி பாக்கியம் அணிந்து இருந்த 10 பவுன் தங்க நகைகளை கொடூரமான முறையில் கொலை செய்து எடுத்து சென்றது தெரிய வந்தது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக 12 மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மேற்கு மண்டல ஐஜி, டிஐஜி மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் மாவட்டம் முழுவதும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், CCTV ஆய்வு ஒன்றில், இருசக்கர வாகனம் ஒன்றில், மூன்று பேர் வாய்க்கால் ஓரமாகவே செல்லும் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தியதில், அவர்கள் அறச்சலூர் பகுதியை சேர்ந்த ரமேஷ், மாதேஷ், அச்சியப்பன் என தெரிய வந்தது.

இதனையடுத்து அவர்கள் 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தியதில், கொள்ளையடித்த நகைளை அரச்சலூர் சென்னிமலைபாளையத்தை சேர்ந்த ஞானசேகரனிடம் கொடுத்து உருக்கியதாக தெரிவித்தனர். இதனையடுத்து ஞானசேகரனையும் போலீசார் கைது செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட 4 பேரையும் மருத்துவ பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பிறகு, எழுமாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி ஜீன் 2ம் தேதி (2.06.2025) வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

தொடர்ந்து, 3 பேரிடமும் நடைபெற்ற விசாரணையில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சேமலைக்கவுண்டன் பாளையத்தை சேர்ந்த தெய்வசிகாமணி, அவரது மனைவி அலமேலு மற்றும் அவர்களுடயை மகன் செந்தில்குமார் ஆகியோர் கடந்த ஆண்டு நவம்பர் 29- ம் தேதி படுகொலை செய்யப்பட்டு நகை,பணம் கொள்ளையடித்த சம்பவத்திலும் தொடர்பு இருப்பது தெரியவந்ததுள்ளது.

இதனையடுத்து தற்போது சிவகிரி வழக்கில் மட்டும் நான்கு பேரையும் கைது செய்துள்ளதாகவும், பல்லடம் வழக்கு தொடர்பாக தடயங்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.