தமிழ்நாடு

கிண்டல் செய்ததால் மூண்ட பகை: குற்றாலம் அருகே வியாபாரி உடல் மீட்பு!

அடிக்கடி கிண்டல் செய்ததால் வியாபாரியை கடத்தி கொலை செய்த மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கிண்டல் செய்ததால் மூண்ட பகை: குற்றாலம் அருகே வியாபாரி உடல் மீட்பு!
Enmity sparked by teasing
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே வியாபாரி ஒருவர் காரில் கடத்திச் செல்லப்பட்டு, தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்விரோதம் காரணமாக இந்தச் சம்பவம் அரங்கேறியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னணி மற்றும் கடத்தல்

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 48). இவர் வீரவநல்லூர் பஜாரில் மாவு கடை மற்றும் சமையல் பாத்திரங்கள் வாடகை நிலையம் நடத்தி வந்தார். நேற்று (திங்கட்கிழமை) கடையில் இருந்த ராம்குமாரை, காரில் வந்த மர்மக் கும்பல் ஒன்று கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இரவு வெகுநேரமாகியும் ராம்குமார் வீடு திரும்பாததால், அவரது மனைவி போலீசில் புகார் அளித்தார். போலீசார் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரின் பதிவெண்ணை வைத்து டிரைவரைப் பிடித்து விசாரித்தனர்.

குற்றாலத்தில் கொடூரம்

விசாரணையில், புதுக்குடியைச் சேர்ந்த சிக்கன் கடைக்காரர் கௌதம் உள்ளிட்ட மூன்று பேர் ராம்குமாரைக் காரில் ஏற்றிக்கொண்டு குற்றாலத்தில் உள்ள ஒரு விடுதிக்கு அழைத்துச் சென்றது தெரியவந்தது. இதற்கிடையே, குற்றாலத்தில் ஒரு தனியார் விடுதி அருகே ராம்குமார் கொலை செய்யப்பட்டு கிடப்பதாகக் குற்றாலம் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ராம்குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலைக்கான காரணம் மற்றும் கைது

போலீசார் நடத்திய விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ராம்குமார் கடை வைத்திருக்கும் பகுதியிலேயே சிக்கன் கடை வைத்திருந்த கௌதம் என்ற நபரை ராம்குமார் அடிக்கடி கிண்டல் செய்து பேசியதால் அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கௌதம், தனது நண்பர்களுடன் சேர்ந்து ராம்குமாரைத் தீர்த்துக் கட்டத் திட்டம் தீட்டியுள்ளார்.

கடத்திச் செல்லப்பட்ட ராம்குமாரை குற்றாலத்தில் உள்ள பராசக்தி மகளிர் கல்லூரி அருகே ஒரு லாட்ஜில் அடைத்து வைத்திருந்த அந்தக் கும்பல், மதுபோதையில் ராம்குமாரைக் கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொலை செய்து, பின்னர் உடலை அங்கேயே வீசிவிட்டுத் தப்பிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி, கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேரையும் இரவோடு இரவாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மது மற்றும் கஞ்சா போதையில் இருந்ததால், இன்று காலையில் போதை தெளிந்த பிறகு அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.