தமிழ்நாடு

ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்...பூந்தமல்லி – போரூர் இடையே சோதனை ஓட்டம் வெற்றி

பூந்தமல்லி - போரூர் இடையே ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் 2ம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றி

ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்...பூந்தமல்லி – போரூர் இடையே சோதனை ஓட்டம் வெற்றி
ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்

சென்னை மெட்ரோ ரயிலில் இரண்டாம் கட்டத்திட்டத்தில் 63,246 கோடி மதிப்பில், மூன்று வழிதடங்களில், 118.9 கிலோமீட்டர் தொலைவிற்க்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஒட்டுமொத்தமாக 128 ரயில் நிலையங்கள் அமைய உள்ளது.மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்திட்டத்தில் 4-ம் வழித்தடமான பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரையிலான 26.1 கி.மீ. தொலைவின் ஒரு பகுதியான பூந்தமல்லி முதல் போரூர் வரையில் முதற்கட்டமாக இந்த ஆண்டு டிசம்பரில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

பூந்தமல்லி நெடுஞ்சாலை மெட்ரோ ரயில் நிலையம் முதல் போரூர் வரையில் மொத்தம் 10 ரயில் நிலையங்கள் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில், பூந்தமல்லி பணிமனையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் முதன் முறையாக கடந்த மார்ச் மாதம் பூந்தமல்லி பணிமனையில் இருந்து முல்லை தோட்டம் வரையில் 2.5 கிலோமீட்டர் தூரத்திற்கு 25 கி.மீ. வேகத்தில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

சோதனை ஓட்டம் வெற்றி

இந்த நிலையில் பூந்தமல்லி பணிமனை முதல் போரூர் வரை 9 கி.மீ. தொலைவுக்கு ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மெட்ரோ மேலாண் நிர்வாக இயக்குனர் சித்திக், "பூந்தமல்லி முதல் போரூர் வரை சோதனை ஓட்டம் நடைபெற்றது மிகவும் சேலஞ்சாக இருந்தது. அடுத்து மே 30 போரூர் முதல் பூந்தமல்லி வரை சோதனை ஓட்டம் மேற்கொள்ள உள்ளோம்.

பல முறை சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட பின் தான் பயணிகளுக்கு அனுமதிக்க உள்ளோம். இந்த 5 மாதத்தில் பல சோதனை ஓட்டம் மேற்கொள்ள உள்ளோம். 15-20 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த சோதனை ஓட்டத்தை நடத்தினோம். படிப்படியாக வேகத்தை அதிகரித்து ரயிலை சோதனை முறையில் இயக்க திட்டம். பூந்தமல்லி டூ பேரூர் வரை 2 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டு உள்ளது" என்று தெரிவித்தார்.