சென்னை கிண்டி அரசு கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை உலகத்தரம் வாய்ந்த மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இங்கு உள்நோயாளிகள், புறநோயாளிகள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த மருத்துவமனையில், புற்றுநோய் பிரிவில் பாலாஜி என்பவர் சிறப்பு மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
மருத்துவர் பாலாஜி ஜெகநாதன் நேற்று (நவ. 14) நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து கொண்டிருந்தபோது, விக்னேஷ் என்ற இளைஞர் அவரை கத்தியால் குத்தினார். இதையடுத்து உடனடியாக மருத்துவர் பாலாஜி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், கூறியுள்ளதாவது, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை,கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் புற்றுநோய் தலைமை மருத்துவர் பாலாஜியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், அவரது குடும்பத்தினரை சந்தித்து எனது ஆறுதல் தெரிவித்தார். மேலும், மருத்துவர் பாலாஜி அவர்கள் பூரண குணமடைய வேண்டுமென்று இறைவனை பிராத்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் ஓர் இணக்கமான சூழ்நிலையில் பணிபுரியும் அளவிற்கு மருத்துவர்களுக்கான மருத்துவமனை கட்டமைப்பை அரசு மேம்படுத்த வேண்டும். எந்த வகையிலும் மருத்துவர்கள் தாக்கப்படும் சூழ்நிலை ஏற்படுத்தக்கூடாது என்பதில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
இதை ஒரு தனிப்பட்ட நிகழ்வாக பார்க்காமல் வருங்காலத்தில் ஏழை நோயாளிகள் முழு நம்பிக்கையோடு அரசு மருத்துவமனைக்கு வருவதற்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அரசு செயல்பட வேண்டும். மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும்.
மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகள் சரியான நேரத்தில் அரசினால் சரி செய்யப்பட வேண்டும்.
மருத்துவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.