தமிழ்நாடு

ஆனைமலை திட்டத்திற்காக கேரள அரசுடன் பேச்சுவார்த்தை- அமைச்சர் துரைமுருகன்

ஆனைமலை பாண்டியாறு திட்டம் குறித்து விரைவில் கேரளா அரசோடு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

ஆனைமலை திட்டத்திற்காக கேரள அரசுடன் பேச்சுவார்த்தை- அமைச்சர் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன்
சட்டப்பேரவையில் வினாக்கள், விடைகள் நேரத்தில், ஆனைமலை ஆறு நல்லாறு திட்டத்திற்கும், பாண்டியாறு பொன்னமரா திட்டத்திற்கும் கேரளா அரசோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும், அந்த பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி இரண்டு திட்டங்களையும் நிறைவேற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் கொங்கு ஈஸ்வரன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பரம்பிக்குளம்-ஆழியார் ஒப்பந்தத்தில் இரண்டு ஆறுகளில் இருந்து நீர் பெறுவதாக உள்ளதாகவும், பலமுறை கேரள அரசிற்கு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தும் அவர்கள் அதுகுறித்து பேசவில்லை என கூறினார்.

மேலும், கேரளா அரசு மெத்தனமாக உள்ளதாக குற்றம்சாட்டிய அவர், விரைவில் கேரளா அரசோடு பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் உறுதியளித்தார்.