தமிழகம் முழுவதும் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்துவது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை திருவேற்காடு பகுதியில், கருமாரி அம்மன் கோவில், வேதபுரீஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மற்றும் சென்னை நகரை இணைக்கும் முக்கிய சாலைகளும் இப்பகுதியில் உள்ளன. இந்த சாலைகளில், மாடுகள் கட்டுப்பாடுகள் இன்றி சுற்றித் திரிவதால் அதிகமான விபத்துக்கள் ஏற்படுவதாகவும், சாலையில் செல்லும் பொதுமக்களை மாடுகள் முட்டி பலர் காயமடைந்திருப்பதாககூறி வழக்கறிஞர் காமேஷ் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில் திருவேற்காடு பகுதிகளில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்த திருவேற்காடு நகராட்சி, காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ் சுந்தர், எம். சுதீர்குமார் அமர்வு, தமிழகம் முழுவதும் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்துவது குறித்து கால்நடை துறை செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் ஆகியோர் விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை 3 வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.