தமிழ்நாடு

கழிவுகளை கேரள மாநில அரசே பொறுப்பேற்று அகற்ற வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

கேரளாவின் மருத்துவக் கழிவுகள் உள்ளிட்ட அனைத்துக் கழிவுகளையும் கேரள மாநில அரசே பொறுப்பேற்று அகற்ற வேண்டும் என தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிடப்பட்டுள்ளது.

கழிவுகளை கேரள மாநில அரசே பொறுப்பேற்று அகற்ற வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
கழிவுகளை கேரள மாநில அரசே பொறுப்பேற்று அகற்ற வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

திருநெல்வேலி மாவட்டத்தில் நான்கு கிராமங்களில் கொட்டப்பட்ட கேரளாவின் மருத்துவக் கழிவுகள் உள்ளிட்ட அனைத்துக் கழிவுகளையும் கேரள மாநில அரசே பொறுப்பேற்று உடனடியாக அகற்ற வேண்டும் என தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிடப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளைக் கேரளாவுக்கே கொண்டு செல்ல வேண்டும் அல்லது நெல்லை மாவட்டத்தில் இக்கழிவுகளை மேலாண்மை செய்யும் ஒரு நிறுவனத்திடம் கேரள அரசு இதை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

கேரள மருத்துவக் கழிவுகள் நெல்லையில் கொட்டப்பட்டது தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை இன்று தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் கொண்ட அமர்வில் நடைபெற்றது.  

இந்த வழக்கில் ஆஜரான மாசு கட்டுப்பாடு வாரிய வழக்கறிஞர் சாய் சத்யஜித், 18.12.2024 அன்று இந்த விவகாரம் தொடர்பாக கேரள மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவருக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர் கடிதம் எழுதியிருபதாகவும் அக்கடிதத்தில், கழிவுகளுக்குச் சொந்தமான Regional Cancer Centre,  Leela Hotels, Kovalam ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும், மாநில எல்லையோரம் உள்ள மாவட்டங்களில் கழிவுகளைக் கண்காணிக்கும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறும் கோரியிருப்பதாகத் தெரிவித்தார்.

கேரள மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர் தரப்பு வழக்கறிஞர் பேசியபோது, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் கடிதத்தின் அடிப்படையில் கழிவுகளுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். தொடர்ந்து, வழக்கு அடுத்தகட்ட விசாரணைக்காக டிசம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.