தமிழ்நாடு

UGC NET 2024: மத்திய அரசிற்கு இதுவே வாடிக்கையாகிவிட்டது- மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழ்ப் பண்பாட்டுத் திருநாட்களின்போது முக்கியத் தேர்வுகள் நடைபெறும் என ஒன்றிய அரசு அறிவிப்பதும், மாநில அரசின் தலையீட்டுக்குப் பின்னர் அது ஒத்திவைக்கப் படுவதும் வாடிக்கையாகிவிட்டது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

UGC NET 2024: மத்திய அரசிற்கு இதுவே வாடிக்கையாகிவிட்டது- மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
மத்திய அரசை விமர்சித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு வெளியிட்டுள்ளார்

தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் பல்கலைக்கழக மானியக்குழுவின் நெட் தேர்வில் (UGC-NET) தேர்ச்சி பெறுவதன் மூலம் தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவிப்பேராசிரியர் பணி மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும். இந்த தேர்வானது ஆண்டில் இருமுறை நடத்தப்படுகிறது.

அதன்படி, 30 பாடங்களுக்கான பல்கலைக்கழக மானியக்குழுவின் நெட் தேர்வு ஜனவரி 3-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 16-ஆம் தேதி வரை நடைபெறும் என்று கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. மேலும், டிசம்பர் 11-ஆம் தேதி வரை இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது. 

தமிழகத்தில் ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல், ஜனவரி 15-ஆம் தேதி திருவள்ளுவர் தினம், ஜனவரி 16-ஆம் தேதி உழவர் திருநாள் எனத் தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்கள் என்பதால் அந்த தினங்களில் நடத்த திட்டமிட்டிருந்த பல்கலைக்கழக மானியக்குழுவின் நெட் தேர்வை மாற்றக்கோரி பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், மதுரை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் எழுதினர். 

இதையடுத்து, பொங்கல் (15.01.2025) அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்ட பல்கலைக்கழக மானியக்குழுவின் நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதற்கான மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மற்ற தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தமிழ்ப் பண்பாட்டுத் திருநாட்களின்போது முக்கியத் தேர்வுகள் நடைபெறும் என ஒன்றிய அரசு அறிவிப்பதும், மாநில அரசின் தலையீட்டுக்குப் பின்னர் அது ஒத்திவைக்கப் படுவதும் வாடிக்கையாகிவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் பகிர்ந்துள்ள சமூக வலைதளப் பதிவில், "UGCNET தேர்வுகளை வேறொரு நாளுக்கு மாற்றிட வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருந்தேன். தற்போது அத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருப்பது சரியான முடிவு!

தமிழ்ப் பண்பாட்டுத் திருநாட்களின்போது முக்கியத் தேர்வுகள் நடைபெறும் என மத்திய அரசு அறிவிப்பதும், மாநில அரசின் தலையீட்டுக்குப் பின்னர் அது ஒத்திவைக்கப் படுவதும் வாடிக்கையாகிவிட்டது. இனியாவது நாட்டில் செயல்படும் எந்தவொரு அமைப்பும், நமது நாட்டின் பன்முகத்தன்மையையும் - இங்கு வாழும் அனைத்துத் தரப்பு மக்களின் உணர்வுகளையும் மதித்து முடிவுகளை எடுப்பார்கள் என நம்புவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.