தமிழ்நாடு

திமுகவினருக்கும், தவெகவினருக்கும் மோதல்- மாம்பாக்கத்தில் பரபரப்பு

வாடகைக்கு எடுத்த பந்தலுக்கு தவெகவினர் பணம் கேட்டதால் திமுகவினர் கத்தியால் வெட்டியதாக போலீசில் புகார்

 திமுகவினருக்கும், தவெகவினருக்கும் மோதல்- மாம்பாக்கத்தில் பரபரப்பு
மாம்பாக்கம் அருகே திமுக, தவெக நிர்வாகிகள் இடையே மோதல்
செங்கல்பட்டு மாவட்டம், மாம்பாக்கம் ஒன்றிய கவுன்சிலர் அருண்குமார் என்பவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக மாம்பாக்கத்திலுள்ள அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தில் வாலிபால் போட்டி நடத்தினார்.அப்போது திமுகவைச் சேர்ந்த விக்னேஸ்வரன், லோகேஸ்வரன் ஆகியோர் மூலமாக தவெகவைச் சேர்ந்த வீரா என்பவரிடம் சேர், பந்தல் ஆகியவற்றை வாடகைக்கு எடுத்தனர். ஆனால் நிகழ்ச்சி முடிந்தும் கூட விக்னேஸ்வரன், லோகேஷ் தரப்பினர் முழுமையான வாடகை தொகையை செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

கத்தியால் வெட்டு

இந்த நிலையில் விக்னேஸ்வரன் மற்றும் லோகேஷ் ஆகியோரின் உறவினர் இறந்துவிட்டார். இதனால் இறப்பு நிகழ்ச்சிக்காக வீராவிடம் பந்தல் சேர்களை கேட்டதாக தெரிகிறது. ஏற்கனவே பணம் செலுத்தாததால் பந்தல் மற்றும் சேர்கள் கொடுக்க முடியாது என்று கூறியதால் இரு தரப்பினருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது.

நேற்று லோகேஷ் மற்றும் விக்னேஸ்வரன் ஆகிய இருவரும் வீராவின் ஓட்டுனர் ராஜியை வழிமறித்து பிரச்சனை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு ஓட்டுனர் ராஜி, வீரா மற்றும் வீராவின் அண்ணன் ரமேஷ் ஆகிய இருவரையும் அழைத்து வந்து விக்னேஸ்வரனை கத்தியால் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திமுக, தவெக நிர்வாகிகள் புகார்

இதனால் விக்னேஸ்வரனின் கையில் நான்கு தையல் போடும் அளவிற்கு காயம் ஏற்பட்டதால் மாம்பாக்கத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்து தாழம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திமுகவைச் சேர்ந்த விக்னேஷ், லோகேஷ் தரப்பின் சார்பில் தாய் சித்ரா தனது மகனை வீரா, ரமேஷ், ராஜி, லலித் ஆகியோர் கத்தியால் வெட்டிவிட்டதாக தாழம்பூர் காவல் நிலையம் வந்து எழுத்துப்பூர்வமாக புகார் தெரிவித்துள்ளார்.

தவெகவைச் சேர்ந்த வீரா தனது டிரைவர் ராஜியை வழிமறித்து லோகேஷ், விக்னேஸ்வரன் மற்றும் அவரது நண்பர்கள் தாக்கியதாக தாழம்பூர் காவல் நிலையம் வந்து எழுத்துப்பூர்வமாக புகார் தெரிவித்துள்ளனர். 2 புகார்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.