தமிழ்நாடு

Chennai Rains: சென்னையில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை

சென்னையில் நேற்றுபோலவே இன்றும் விடிய, விடிய கனமழை கொட்டித்தீர்த்ததால் சாலைகளில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

   Chennai Rains: சென்னையில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை
சென்னையில் விடிய விடிய கனமழை பெய்தது
வளிமண்டல மேக மாறுபாடு காரணமாகச் சென்னையில் நேற்று விடியற்காலையில் பலத்த இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் சென்னையில், நேற்றைய தினத்தைப் போலவே இன்றும் அதிகாலை முதலே லேசான இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் அதிகாலையில் வேலைக்குச் செல்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

சென்னையில் விடிய, விடிய மழை

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் காலை 7 மணிவரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை இருக்கும் என்று எச்சரித்துள்ளது.


சென்னையில் கோடம்பாக்கம், கிண்டி, வடபழனி, அண்ணாசாலை, கோயம்பேடு, அண்ணாநகர், புரசைவாக்கம், வளசரவாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம் எனப் பல்வேறு பகுதிகளில் பரவலாக அதிகாலை முதலே பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் வடபழனி, கோயம்பேடு, துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியது. சாலைகளில் வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பல இடங்களில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்துள்ளதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

மெட்ரோ பணிகளால் மழைநீர் தேங்கியது

அதே நேரம், சென்னையில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் மிகத் தீவிரமாக இருக்கும் என்பதால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

சென்னையில் பல்வேறு இடங்களில் மெட்ரோ பணிகள், மேம்பால பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மழை விடாமல் பெய்து வருவதால் மழைநீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு

சென்னையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதை மாநகராட்சி அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். அதிக கனமழை பெய்து வீடுகளில் மழைநீர் புகுந்தால் அருகாமையில் உள்ள முகாம்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளையும் சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.குறிப்பாக வடகிழக்கு பருவமழை மற்றும் அடுத்தாண்டு தேர்தல் நடைபெற உள்ளதால் சாலை பணிகளைத் துரிதமாகச் செய்து முடிக்கத் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மேலும், தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் நாகை, கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.