தமிழ்நாடு

பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்..விரைவில் பணிகளுக்கு டெண்டர் கோர திட்டம்

முதல் கட்ட கட்டுமான பணிகள் ரூ.11,455 கோடி செலவில் வரும் ஜனவரி மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்..விரைவில் பணிகளுக்கு டெண்டர் கோர திட்டம்

பரந்தூர் விமான நிலையம்

சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் அடுத்த பரந்தூரில் உள்ள 20 கிராமங்களை உள்ளடக்கி 5,476 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படுகிறது.இதற்கான நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து இறங்கியுள்ளன.

பரந்தூர் விமான நிலையத்துக்கு தேவையான நிலத்தை கையகப்படுத்தம் பணியில் தமிழக அரசின் தொழில்துறை ஈடுபட்டு வருகிறது.இதையடுத்து, சுற்றுச்சூழல் அனுமதி கோரி, பரந்தூர் விமான நிலைய திட்டத்தை செயல்படுத்தும், தமிழக அரசின் டிட்கோ நிறுவனம் மத்திய அரசிடம் விண்ணப்பித்தது.

கொள்கை அளவில் ஒப்புதல்

இதைத்தொடர்ந்து, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு மற்றும் மேலாண்மை திட்டத்தை தயார் செய்வதற்கான ஆய்வு எல்லைகளை வகுத்து அனுமதியளித்தது. இந்நிலையில், பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு கொள்கையளவில் ஒப்புதல் பெறுவதற்கான விண்ணப்பத்தை மத்திய அரசிடம் டிட்கோ சமர்பித்தது. இந்தத் திட்டம் தொடர்பான பல்வேறு ஆவணங்கள் மற்றும் அறிக்கைகளுடன் இந்த விண்ணப்பம் சமர்பித்தது.

இந்த விண்ணப்பதை பரிசீலனை செய்வது தொடர்பான சிறப்பு கூட்டம் கடந்த மார்ச் 12ம் டெல்லியில் நடைபெற்றது.இந்நிலையில் பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்துக்கு மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதலை அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கட்டுமான பணிகளுக்கு விரைவில் டெண்டர் கோரப்பட உள்ளது. முதல் கட்ட கட்டுமான பணிகள் ரூ.11,455 கோடி செலவில் வரும் ஜனவரி மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.27,400 கோடி செலவில் இந்த விமான நிலைய கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.