தமிழ்நாடு

'உனக்காக காத்திருக்கிறேன்' - விசிட்டிங் கார்டு கொடுத்து செவிலியருக்கு தொல்லை.. மடக்கிப்பிடித்த ஆட்டோ ஓட்டுநர்!

வளசரவாக்கத்தில் செவிலியரை பின்தொடர்ந்து தொந்தரவு கொடுத்த நபரை ஆட்டோ ஓட்டுநர் துரத்திப் பிடித்துப் போலீசாரிடம் ஒப்படைத்தார்.

'உனக்காக காத்திருக்கிறேன்' - விசிட்டிங் கார்டு கொடுத்து செவிலியருக்கு தொல்லை.. மடக்கிப்பிடித்த ஆட்டோ ஓட்டுநர்!
Auto driver harasses nurse by giving her visiting card
சென்னை, வளசரவாக்கம் பேருந்து நிலையத்தில் செவிலியர் ஒருவரைப் பின்தொடர்ந்து தொந்தரவு கொடுத்த நபரை, ஆட்டோ ஓட்டுநர் துரத்திப் பிடித்துப் போலீசாரிடம் ஒப்படைத்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது இளம் பெண் ஒருவர், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறார். நேற்று (செப்.25) இரவு பணியை முடித்துவிட்டு, வளசரவாக்கம் கேசவர்த்தினி பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காகக் காத்திருந்தார்.

விசிட்டிங் கார்டு கொடுத்துத் தொல்லை

அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர், இருசக்கர வாகனத்தில் அவரைப் பின்தொடர்ந்து வந்துள்ளார். இதனால் பயந்த அந்தப் பெண் ஆட்டோவில் ஏற முயன்றபோது, அந்த நபர் வேகமாக வந்து ஒரு விசிட்டிங் கார்டைக் கொடுத்து, "உனக்காகத்தான் காத்திருக்கிறேன்" எனக் கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த செவிலியர், ஆட்டோ ஓட்டுநர் ராஜேஷிடம் நடந்ததைத் தெரிவித்துள்ளார்.

துரத்திப் பிடித்த ஆட்டோ ஓட்டுநர்

உடனே ஆட்டோ ஓட்டுநர் ராஜேஷ், ஆட்டோவிலேயே அந்த நபரைத் துரத்திச் சென்று பிடித்துக் கண்டித்துள்ளார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டதால், அங்கிருந்த பொதுமக்களின் உதவியுடன் அந்த நபரைப் பிடித்து, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி உள்ளன.

போலீசார் விசாரணையில், அந்த நபர் போரூரைச் சேர்ந்த ரமேஷ் என்பதும், மெடிக்கல் ரெப்பாகப் பணியாற்றி வருவதும் தெரிய வந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.