தமிழ்நாடு

பணி நியமனத்தில் முறைகேடு குற்றச்சாட்டு: களங்கம் கற்பிக்கும் முயற்சி வெற்றி பெறாது- அமைச்சர் கே.என்.நேரு

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ரூ.888 கோடி லஞ்சம் பெற்று முறைகேடாகப் பணி நியமனம்செய்யப்பட்டுள்ளதாக எழுத குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கே.என்.நேரு மறுப்பு தெரிவித்துள்ளார்.

பணி நியமனத்தில் முறைகேடு குற்றச்சாட்டு: களங்கம் கற்பிக்கும் முயற்சி வெற்றி பெறாது- அமைச்சர் கே.என்.நேரு
Minister K.N.Nehru
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ரூ.888 கோடி லஞ்சம் பெற்று முறைகேடாகப் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளது எனத் தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு மறுப்பு தெரிவித்துள்ளார்.

அமலாக்கத் துறையின் அரசியல் முயற்சி

"திராவிட மாடல் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டுமென்ற அரசியல் உள்நோக்கத்தோடு, பல ஆண்டுகாலத்திற்கு முந்தைய வங்கி வழக்கு ஒன்றினைத் தூசு தட்டி எடுத்து, அதனை ஊதிப் பெரிதாக்கும் முயற்சியில் தோற்றுப் போன மத்திய அரசின் அமலாக்கத் துறை மேற்கொண்டுள்ள மேலும் ஒரு முயற்சி தான், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் பணி நியமனம் குறித்த கடிதம்.

நிரப்பப்பட்ட காலிப் பணியிடங்கள்

2011 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரையுள்ள பத்தாண்டு அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் போதிய நியமனங்கள் செய்யப்படாமல், காலிப் பணியிடங்கள் அதிகமாகி நிர்வாகத்தை மேற்கொள்வதில் மிகுந்த சிரமங்கள் இருந்தன. இந்நிலையில், 2019 பணியிடங்களை நேரடி நியமனம் மூலமாக நிரப்ப வேண்டும் என்பதற்காக, அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக கடந்த 2.2.2024 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பிற பணியிடங்களையும் சேர்த்து, 2,569 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டன.

வெளிப்படையான தேர்வு நடைமுறை

இப்பணியிடங்களை வெளிப்படையான, ஒளிவுமறைவற்ற முறையில் நிரப்புவதற்காக, தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெறுவதற்கெனத் தனியாக ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டது. அந்த இணையதளம் மூலமாக, 2 லட்சத்து 499 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலனை செய்யப்பட்டு, விண்ணப்பதாரர்களுக்கு இணையவழியில் நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக, 38 மாவட்டங்களில் உள்ள 591 மையங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டன.

இந்த எழுத்துத் தேர்வுகள் அனைத்தும், அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக மதிப்பீடு செய்யப்பட்டு, எழுத்துத் தேர்வு முடிவுகளும் இணைய தளத்தில் 20.9.2024 இல் வெளியிடப்பட்டன. நியாயமான முறையில் தேர்வுகள் நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதால், இந்தத் தேர்வில் கலந்து கொண்ட லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்களிடமிருந்து ஒரு ஆட்சேபணை கூட பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நேர்காணல் மற்றும் இறுதி நியமனம்

இதனையடுத்து, பல்வேறு பணியிடங்களுக்கு, பணித் தகுதியின் அடிப்படையில், அதிகாரிகளைக் கொண்ட தேர்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டன. பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு பதவிகளுக்கு 13 தேர்வுக் குழுவினால் 7 ஆயிரத்து 272 தேர்வர்களுக்குச் சான்றிதழ் சரிபார்ப்பும், நேர்முகத் தேர்வுகளும் நடத்தப்பட்டன. இந்தச் சான்றிதழ் சரிபார்ப்பும், நேர்முகத் தேர்வுகளும் முடிவுற்ற பின்னர், இறுதித் தேர்வு முடிவுகள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டன. மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையிலும், கலந்தாய்வு முறையிலும், இறுதியாக 2,538 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நேரடி நியமனம் தொடர்பாக பல்வேறு வழக்குகளும், தடையாணைகளும் நிலுவையில் இருந்த நிலையில், கடந்த 4.7.2025 அன்று, அனைத்து தடைகளும் உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட நிலையில், இறுதித் தேர்வுப் பட்டியலும் வெளியிடப்பட்டது.

இவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்களுக்குப் பணியாணைகள் முதலமைச்சரால் வழங்கப்பட்டன. இத்தகைய ஒரு வரலாற்றுச் சாதனை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையால் நிகழ்த்தப்பட்டதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், இதற்குக் களங்கம் கற்பிக்கும் வகையில், அமலாக்கத் துறை மூலமாக மத்திய அரசு இத்தகைய அரசியல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

நகராட்சி நிர்வாகம் துறை அலுவலர்கள் தலையீடு இல்லை

இந்தத் தேர்வுகளை முன்னின்று மிகச் சிறப்பாக நடத்திய அண்ணா பல்கலைக்கழகமானது, உலகில் தலைசிறந்த சுயாட்சிப் பல்கலைக்கழகங்களுள் ஒன்று என்பதையும், இந்த பல்கலைக்கழகம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ, நகராட்சி நிர்வாகத் துறையின் எந்தவிதக் கட்டுப்பாட்டிற்கும் உட்பட்டது அல்ல என்பதையும் அனைவரும் அறிவார்கள். முந்தைய ஆட்சிக் காலத்திலும், அதாவது கடந்த 2012, 2013, 2014, 2015 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் பல்வேறு பதவிகளுக்கு இதே அண்ணா பல்கலைக்கழகம் மூலமாகத்தான் தேர்வுகள் நடத்தப்பட்டு, பணியிடங்கள் நிரப்பப்பட்டன என்பதையும் இங்கே சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளேன். இந்நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வுகளில் மட்டும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அலுவலர்கள் தலையிட்டதால் தவறுகள் நிகழ்ந்துள்ளன என்ற கூற்று நகைப்புக்குரியது.

களங்கப்படுத்தும் முயற்சி வெற்றி பெறாது

இரண்டு லட்சம் தேர்வர்கள் விண்ணப்பித்து, ஒரு இலட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதி, ஒளிவுமறைவற்ற முறையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, இறுதியாக 2,538 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு, சிறப்பாகப் பணிபுரிந்து வரும் நிலையில், இவ்வாறு களங்கம் கற்பிக்கும் முயற்சி எக்காலத்திலும் வெற்றி பெறாது. அரசியல் நோக்கத்தோடு மேற்கொள்ளப்படும் இதுபோன்ற நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதோடு, அவற்றை முறியடிக்கத் தேவையான அனைத்துச் சட்டபூர்வ நடவடிக்கைகளையும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மேற்கொள்ளும்" என்று தெரிவித்துள்ளார்.