தமிழ்நாடு

ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு.. உயர்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது அமலாக்கத்துறை!

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அமலாக்கத்துறை உதவி இயக்குனர் விகாஷ் குமார் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு.. உயர்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது அமலாக்கத்துறை!
Enforcement Directorate seeks unconditional apology
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாகத் திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அமலாக்கத்துறை உதவி இயக்குனர் விகாஷ் குமார் இன்று (டிசம்பர் 15) சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

வழக்கின் பின்னணி மற்றும் அவமதிப்பு நடவடிக்கை

டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில், சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி ஆவணங்களைப் பறிமுதல் செய்திருந்தது. இதை எதிர்த்து ஆகாஷ் பாஸ்கரன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களைத் திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டதுடன், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்திருந்தது.

உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையிலும், பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக மேல்முறையீட்டு அதிகாரி நோட்டீஸ் அனுப்பியதாகக் கூறி, ஆகாஷ் பாஸ்கரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதையடுத்து, அமலாக்கத்துறைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

உயர் நீதிமன்றத்தில் ஆஜர் மற்றும் மன்னிப்பு

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. முதலில் அமலாக்கத்துறை உதவி இயக்குனர் விகாஷ் குமார் ஆஜராகாதது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததாகக் கூறியதால் விலக்கு அளிக்கப்பட்டதாகவும், தற்போது அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் ஆஜராகி இருக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அமலாக்கத்துறை உதவி இயக்குனர் விகாஷ் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தனர்.

மேல்முறையீட்டு ஆணைய அதிகாரிகள் நிலை

இதனிடையே, இதே வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட அமலாக்கத்துறை மேல்முறையீட்டு ஆணைய தலைவர் பிரதீப் குமார் உபாத்தியாயா மற்றும் நிர்வாக பதிவாளர் நஸ்ரின் சித்திக் ஆகியோர் இன்று நேரில் ஆஜராகவில்லை. அவர்களுக்கு நோட்டீஸ் சென்றடையவில்லை எனக் கூறப்பட்டது. இந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள், அமலாக்கத்துறை மேல்முறையீடு ஆணைய நிர்வாகப் பதிவாளர் நஸ்ரின் சித்திக் வரும் ஜனவரி 19-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.