தமிழ்நாடு

அதிமுகவின் தனபால், இன்பதுரை மாநிலங்களவையில் பதவியேற்பு!

அதிமுகவின் தனபால் மற்றும் ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாகப் இன்று பதவியேற்றனர்.

அதிமுகவின் தனபால், இன்பதுரை மாநிலங்களவையில் பதவியேற்பு!
Dhanapal and Inbadurai take oath in the Rajya Sabha
அதிமுகவின் தனபால் மற்றும் ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாகப் இன்று காலை 11 மணிக்கு பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த பி. வில்சன், சண்முகம், அப்துல்லா மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் கடந்த ஜூலை 24 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. அதேபோல், அதிமுக ஆதரவுடன் தேர்வான பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அதிமுகவின் சந்திரசேகர் ஆகியோரின் பதவிக்காலமும் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் இருந்து காலியான 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.

திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 6 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர். திமுக சார்பில் பி.வில்சன் (இரண்டாவது முறையாக), கவிஞர் சல்மா, மற்றும் எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்கள் மூவரும் கடந்த 25 ஆம் தேதி மாநிலங்களவையில் எம்பிக்களாகப் பதவியேற்றனர். திமுக கூட்டணி கட்சியான மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனும் முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டார். அதிமுக சார்பில் தனபால் மற்றும் ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் இன்று காலை மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றனர்.

ஏற்கனவே அதிமுகவின் தம்பிதுரை, சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள நிலையில், தனபால் மற்றும் இன்பதுரையின் பதவியேற்புடன் மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.