தமிழ்நாடு

காதலித்து ஏமாற்றினார்.. நடிகர் நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை நடிகை பரபரப்பு புகார்!

சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் மீது, ஐந்து ஆண்டுகளாகக் காதலித்துவிட்டு ஏமாற்றிவிட்டதாகத் திருநங்கை துணை நடிகை ஒருவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

காதலித்து ஏமாற்றினார்.. நடிகர் நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை நடிகை பரபரப்பு புகார்!
காதலித்து ஏமாற்றினார்.. நடிகர் நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை நடிகை பரபரப்பு புகார்
சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த திருநங்கையான துணை நடிகை ஒருவர், கடந்த 15 ஆண்டுகளாகத் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் படங்களில் நடித்து வருகிறார். இவர் அளித்த புகாரில், “நானும் நடிகர் நாஞ்சில் விஜயனும் கடந்த 5 ஆண்டுகளாகக் காதலித்து வந்தோம். திருமணம் செய்துகொள்வதாக எனக்கு நம்பிக்கை கொடுத்து, என்மீது பாலியல் துன்புறுத்தல்களைச் செய்தார். கணவன் - மனைவிபோல் நாங்கள் ஒன்றாக வாழ்ந்த நிலையில், தற்போது என்னைத் திருமணம் செய்ய முடியாது என்று கூறி, என்னை ஏமாற்றும் நோக்கத்துடன் பேச மறுக்கிறார்,” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “காதலிக்கும்போது நான் திருநங்கை என்பது அவருக்குத் தெரியாதா?”. ஆனால், இப்போது நான் திருநங்கை என்பதால் என்னுடன் பேச விரும்பவில்லை என்று கூறுவது எனக்கு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் என்னுடன் வாழ்வதற்கு வழிவகை செய்ய வேண்டும். இல்லையென்றால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார். மேலும், புகார்மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து நடிகர் நாஞ்சில் விஜயனிடம் கேட்டபோது, “அவர் யார் என்றே எனக்குத் தெரியாது” என்று கூறி, திருநங்கை குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்துள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு மரியம் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட நாஞ்சில் விஜயனுக்கு, கடந்த மே மாதம் பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.