தமிழ்நாடு

அண்ணாமலை மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.. சமூக ஆர்வலர் புகார்!

அண்ணாமலை தனது வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்து வைத்திருப்பதோடு, நிதி மோசடியிலும் ஈடுபட்டிருக்கிறார்" என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

அண்ணாமலை மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.. சமூக ஆர்வலர் புகார்!
Complaint against Annamalai at Police Commissioner's Office
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் அவரது மனைவி அகிலா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சமூக ஆர்வலர் கோ.தேவராஜன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சொத்து குவிப்பு மற்றும் நிதி மோசடி குறித்து விசாரணை செய்து, அண்ணாமலையை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அவர் அளித்த புகாரில், “தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மற்றும் அவரது மனைவி அகிலா ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளதுடன் நிதி மோசடியிலும் ஈடுபட்டுள்ளனர். எனவே, அவர்கள் மீது விசாரணை நடத்தி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். மேலும், சட்டவிரோதமாகச் சேர்த்த சொத்துகளைப் பறிமுதல் செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவையின் காளப்பட்டியில் ரூபாய் 4.5 கோடி மதிப்பில் நிலம் வாங்கியதாகவும், அதற்கு ரூபாய் 40 லட்சம் பத்திரப்பதிவு செய்ததாகவும் அண்ணாமலைக்கு எதிராகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது வருமானத்திற்கு அதிகமாகச் சேர்க்கப்பட்ட சொத்து என்றும், இது கண்டிப்பாகக் கருப்புப் பணமாகத்தான் இருக்கும் என்றும் தேவராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகம் முழுவதும் அண்ணாமலை மீது 24 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அவற்றை உடனடியாக விசாரணை செய்து அவரை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க வேண்டும் என்றும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.