தமிழ்நாடு

மாற்றுத்திறனாளி எனக்கூறி அலப்பறை- பரிசோதனைக்கு அழைத்தபோது தப்பி ஓட முயன்றதால் பரபரப்பு

தான் மாற்றுத்திறனாளி எனக் கூறி மாதம் 250 ரூபாய் உதவித்தொகை கேட்டு மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் அலப்பறை செய்த நபரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்தபோது தப்பி ஓட முயன்றதால் பரபரப்பு

மாற்றுத்திறனாளி எனக்கூறி அலப்பறை- பரிசோதனைக்கு அழைத்தபோது தப்பி ஓட முயன்றதால் பரபரப்பு
ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி என கூறி அலப்பறை செய்த நபர்
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வலையாம்பட்டு பகுதியைச் சேர்ந்த ராஜு- காஞ்சனா தம்பதிகளின் மகன் சுபாஷ் பாபு. இவர் கடந்த சில மாதங்களாக தான் ஒரு காது கேட்காத மாற்றுத்திறனாளி என்றும் தனக்கு மாதந்தோறும் 250 ரூபாய் உதவித்தொகை வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து பலதரப்பட்ட அலுவலர்களை சந்தித்து மனுக்களை அளித்து கோரிக்கை வைத்துள்ளார்.

மாற்றுத்திறனாளி என கூறி அலப்பறை

ஒவ்வொரு வாரமும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்திற்கும் வந்து தொடர்ந்து அலப்பறை செய்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று வழக்கம் போல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்திற்கு வந்த சுபாஷ் பாபு வழக்கம் போல தான் ஒரு மாற்றுத்திறனாளி என்றும் தனக்கு 250 ரூபாய் மாத உதவித்தொகை வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

அப்போது துறை சார்ந்த அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் இவர் உண்மையில் நல்ல நிலைமையில் உள்ளார்.ஆனால் மாற்றுத்திறனாளி என்று தவறாக பதிவு செய்து உதவித்தொகை கேட்கிறார் என்று கூறினர்.

தப்பி ஓட முன்றதால் பரபரப்பு

அப்போது மாவட்ட ஆட்சியர் இவரை அழைத்துச் சென்று பரிசோதித்து உண்மையில் இவருக்கு காது கேட்காது என்றால் அதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என்று உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளி நலத்துறை சார்ந்த அதிகாரிகள் அந்த நபரை அழைத்துச் சென்று மருத்துவ சோதனைக்கு உட்படுத்த முயன்ற போது அவர் அதிகாரிகளின் கைகளுக்கு பிடிபடாமல் தப்பி ஓட முயன்றார். ஆனாலும் அவரை வலுக்கட்டாயமாக பிடித்து அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால் அதிகாரிகள் சுபாஷ் பாபுவை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.