தமிழ்நாடு

ஏழைகளுக்கு மருத்துவமனை கட்ட நினைத்த பெண் மருத்துவர்...ரூ.10 கோடி சொத்தை ஏமாற்றிய மோசடி கும்பல்

பல ஐஏஎஸ் அதிகாரிகளையும், கட்டுமான நிறுவனங்களைச் சேர்ந்த நபர்களையும் தெரியும் எனக் கூறி உதவுவதாக ஆசை வார்த்தை காட்டியதாக தெரிவித்துள்ளார்.

ஏழைகளுக்கு மருத்துவமனை கட்ட நினைத்த பெண் மருத்துவர்...ரூ.10 கோடி சொத்தை ஏமாற்றிய மோசடி கும்பல்
மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள சங்கர்
மருத்துவமனை கட்ட முடிவு

சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்த 75 வயது பெண் மருத்துவர் கௌரி. இவர் கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இந்நிலையில் மருத்துவர் கௌரி தியாகராய நகர் உள்ள தனியார் மெட்டர்னிட்டி மருத்துவமனையில் தலைமை மருத்துவராக தற்போதும் பணிபுரிந்து வருகிறார். இவர் குடும்பத்தகராறு காரணமாக கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவரது ஒரே மகள் மருத்துவம் படித்து வந்ததாகவும் கடந்த 2007ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் தனிமையில் வாழ்ந்து வரும் பெண் மருத்துவர் கௌரிக்கு சொந்தமாக அடையாறு கஸ்தூரிபாய் நகரில் வீடு ஒன்று உள்ளது. அதில் சங்கர் என்பவர் வாடகைக்கு குடும்பத்துடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

தனிமையில் இருக்கும் பெண் மருத்துவருக்கு உதவி செய்வதாக சங்கர் குடும்பத்துடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் தான் சம்பாதித்த பணத்தை வைத்து சொத்துக்களை வைத்து ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவமனை கட்ட முடிவு செய்துள்ளார்.அதற்கு உதவுவதாக கூறி சங்கர் தன் நண்பர்களுடன் மருத்துவர் கௌரியை அணுகியதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக தனக்கு பல ஐஏஎஸ் அதிகாரிகளையும், கட்டுமான நிறுவனங்களைச் சேர்ந்த நபர்களையும் தெரியும் எனக் கூறி உதவுவதாக ஆசை வார்த்தை காட்டியதாக தெரிவித்துள்ளார்.

சொத்துகள் அபகரிப்பு

மேலும் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை காட்டி நம்ப வைத்தார். சங்கரும் அவரது மனைவியும் புவனேஸ்வரி, மற்றும் வத்சலா ,கோபால கண்ணன் ஆகிய நான்கு பேரும் மருத்துவர் கௌரிடம் இருந்து மருத்துவமனை கட்டுவதற்காக 24 லட்சம் ரூபாய் பணத்தினை கடந்த 2012 ஆம் ஆண்டு பெற்றுக் கொண்டுள்ளனர் . மேலும் தனக்கு சொந்தமாக சோளிங்கநல்லூர் கிராமத்தில் ஈசிஆரில் 9,227 சதுர அடி நிலம் இருப்பதால் அங்கு மருத்துவமனை கட்டலாம் என முடிவு செய்தபோது, அதற்கு அருகில் உள்ள நிலமும் விலைக்கு வருவதாக கூறி மருத்துவமனை கட்ட வசதியாக இருக்கும் என தெரிவித்ததாக சங்கர் அந்த இடத்தையும் வாங்க பணம் வாங்கிக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

தனக்கு வயதானதால் வருவாய்த்துறை, மின்சாரத்துறை மாநகராட்சி மற்றும் இதற்காக வங்கிக் கடன் வாங்குவது தொடர்பான வேலைகளை செய்வதற்கு முடியாது என்பதும் அதனால் சங்கர் தன் பெயரில் பொது அதிகாரம் கொடுத்தால் அனைத்து வேலைகளையும் செய்து தருவதாக கூறி பொது அதிகாரம் பெற்றதாக மருத்துவர் கௌரி தெரிவித்துள்ளார். வீட்டில் உள்ள தெய்வங்கள் முன்னால் சத்தியம் செய்து கொடுத்ததாகவும் தன்னுடைய 7 கோடி ரூபாய் மதிப்பிலான நில சொத்து தொடர்பான ஒரிஜினல் ஆவணங்களை கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.


ரூ.10 கோடி சொத்து

இந்த பொது அதிகாரம் பெறுவது தொடர்பாக சங்கரின் உறவினர்கள் பழனி பச்சையப்பன் ஆகியோர் உடன் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார் இது போன்று மருத்துவமனை கட்டுவது தொடர்பாகவும் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்கள் இருப்பது தொடர்பாகவும் வெளியில் தெரிவிக்காதீர்கள் எனவும் வயதானவர் என்பதால் கொலை செய்து சொத்துக்களை அபகரிக்க நேரிடும் என யாரிடமும் கூறாதீர்கள் என சங்கர் தன்னிடம் தெரிவித்ததாக கௌரி கூறியுள்ளார்.

தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை 2 கோடியே 27 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக் கொண்டதாகவும் கட்டுமானங்களை மேற்கொள்வது போன்று அதற்கான பொருட்களை வாங்கி தன்னை நம்ப வைத்ததாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து வங்கிக் கடன் கிடைக்கவில்லை மற்றும் கட்டிட அனுமதி கிடைக்கவில்லை என பல காரணங்கள் கூறி பணத்தைக் கேட்டுக் கொண்டே இருந்ததால் சந்தேகம் அடைந்து வில்லங்கச் சான்றிதழ் வாங்கி பார்த்த போது தன்னுடைய 7 கோடி ரூபாய் நிலத்தினை நீலாங்கரை சார்பதிவாளர் அலுவலகத்தில் சங்கர் தனது பெயரிலும் மனைவி மற்றும் உறவினர்கள் பெயரில் பதிவு செய்தது தெரிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். போலியாக தான் உயிரோடு இருப்பதற்கான சான்றிதழ் மற்றும் தன்னுடைய கையெழுத்தை போலியாக போட்டு தன் மனைவிக்கு விற்பனை செய்து போன்று ஏமாற்றி அபகரித்தது அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மிரட்டல்

வயதான தன் பெயரில் வங்கிக் கடன் வாங்க முடியாது எனக்கூறி தங்கள் பெயரில் சொத்துக்களை மாற்றி வங்கிக் கடனுக்கு முயற்சி செய்ததாக சங்கர் காரணம் தெரிவித்ததாக கூறியுள்ளார். தொடர்ந்து பல்வேறு காரணங்களை கூறி ஒரிஜினல் பத்திரத்தை வாங்குவதற்கு தன் ஓய்வூதிய பலன் பெறுவதற்கான சான்றிதழ் அடமானம் வைத்தும் பல்வேறு விதமாகவும் பணத்தை வாங்கி ஏமாற்றியதாக மருத்துவர் கௌரி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து தான் கொடுத்த கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டபோது 3.10 கோடி ரூபாய் மதிப்பில் செக்கு போட்டு கொடுத்ததாகவும் ஆனால் பணம் இல்லாமல் அது திரும்பி வந்ததும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து தன்னை மோசடி செய்யும் நோக்கிலேயே ஷங்கரும் அவரது மனைவியும் குடும்பத்தினரும் செயல்பட்டு வந்த காரணத்தினால் இதுகுறித்து தட்டிக் கேட்டபோது தன்னை அவதூறாக பேசி கொலை செய்து விடுவதாக கூறி மிரட்டியதாக மருத்துவர் கௌரி தெரிவித்துள்ளார். மேலும் 20 ரூபாய் பத்திரத்தில் மூன்று கோடி ரூபாய் பணத்தை சங்கர் தன்னிடம் திருப்பிக் கொடுத்ததாக பொய்யான ஆவணத்தை காட்டி மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒருவர் கைது

வயதான காலத்தில் உன்னால் எதுவும் செய்ய முடியாது எனவும் தனக்கு காவல்துறையினரை தெரியும் எனக் கூறி மிரட்டியதாக மருத்துவர் கௌரி இது தொடர்பாக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சங்கர் அவரது மனைவி புவனேஸ்வரி, வெற்றிவேல், பாலசுந்தரம், மாலதி, வத்சலா கோபால கண்ணன், பச்சையப்பன் பழனி, கார்த்தி உள்ளிட்ட 10 பேர் மீது பெண் மருத்துவர் கௌரியை மோசடி செய்து 10 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அபகரித்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் முதற்கட்டமாக மூளையாக செயல்பட்ட சங்கர் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கும்பல் இதேபோன்று எத்தனை பேரிடம் மோசடி செய்து சொத்துக்களை அபகரித்துள்ளார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மீதமுள்ள நபர்களை பிடிப்பதற்கு தனிப்படை போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.