சென்னையில் அமித்ஷா
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து முடிவு செய்யவும், பாஜக மாநிலத் தலைவர் தேர்வு குறித்தும் முடிவு செய்ய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு சென்னைக்கு வருகை தந்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியுள்ள அமித்ஷா இன்று நண்பகல் 12 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். இந்த நிலையில் குமரி அனந்தன் மறைவையொட்டி, தந்தையை இழந்து வாடும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜனுக்கு நேரில் ஆறுதல் தெரிவிக்க சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை இல்லத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்றார்.
அமித்ஷா ஆறுதல்
அமித்ஷா வருகையால் விருகம்பாக்கம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தமிழிசை இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த குமரி அனந்தன் திருவுருப்படத்திற்கு அமித்ஷா மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து அமித்ஷா சென்னை கிண்டியில் உள்ள ஹோட்டலில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். பின்னர் மதிய உணவை முடித்துக்கொண்டு 3 மணியளவில் டெல்லி புறப்படுவார் என கூறப்படுகிறது. மாலை 5 மணிக்கு புறப்படுவார் என கூறப்பட்ட நிலையில், முன்னதாகவே புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.