சென்னை கிண்டியில் அமைந்துள்ள, கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த அரசு மருத்துவரை கத்தியில் குத்திய இளைஞரை போலீசார் கைது செய்யப்பட்ட நிலையில், விரிவாண விசாரணை நடந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கிண்டியில் உலகத்தரம் வாய்ந்த மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இங்கு உள்நோயாளிகள், புறநோயாளிகள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த மருத்துவமனையில், புற்றுநோய் பிரிவில் பாலாஜி என்பவர் சிறப்பு மருத்துவராக பணியாற்றி வருகிறார். மருத்துவர் பாலாஜி ஜெகநாதன் இன்று நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து கொண்டிருந்தபோது, பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்தினார். உடனடியாக மருத்துவர் பாலாஜியை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
அரசு மருத்துவரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய விக்னேஷை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவரது தாய் காஞ்சனா கடந்த 6 மாதமாக இந்த மருத்துவமனையில் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார். விக்னேஷின் தாயார் கடந்த ஒரு மாத காலமாக புற்றுநோய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவர் சரியாக சிக்கி அளிக்கவில்லை எனக் கூறி கத்தியால் குத்தியதாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜி அவர்களை நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் திரு. பாலாஜி அவர்களுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளேன்.
அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளுக்கு நேரம் - காலம் பார்க்காமல் உரிய சிகிச்சை அளிப்பதில் நமது அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற பணி அளப்பரியது. இப்பணியின்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம் அனைவரின் கடமையாகும்.
இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.