தமிழ்நாடு

போலி நம்பர் பிளேட் காரில் கஞ்சா கடத்தல்: 50 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது!

விசாகப்பட்டினத்திலிருந்து சென்னைக்கு கஞ்சா கடத்திய வழக்கில் 3 பேர் கைதுசெய்யப்பட்ட நிலையில், தப்பியோடிய ஒரு நபரைப் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

போலி நம்பர் பிளேட் காரில் கஞ்சா கடத்தல்: 50 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது!
போலி நம்பர் பிளேட் காரில் கஞ்சா கடத்தல்: 50 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது!
போலி நம்பர் பிளேட் பொருத்தப்பட்ட காரில் விசாகப்பட்டினத்திலிருந்து சென்னைக்குக் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 50 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் தப்பியோடிய மேலும் ஒரு நபரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து சென்னைக்குக் காரில் கஞ்சா கடத்தப்படுவதாக, அடையாறு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் பேரில், ஆய்வாளர் மீனாட்சி சுந்தரம் தலைமையிலான போலீசார் கிண்டி, மடுவங்கரை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த இசக்கி ராஜா என்பவரைப் பிடித்துச் சோதனையிட்டபோது, அவரது பையில் 25 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரைக் கைது செய்து விசாரணை நடத்தியதில், தூத்துக்குடியைச் சேர்ந்த அவரது நண்பர்களான ஜெபஸ்டின் மற்றும் தளவாய் மதன் ஆகியோர் ஆந்திராவிலிருந்து கஞ்சாவைக் கடத்தி வந்து, இசக்கி ராஜாவிடம் கொடுத்துவிட்டு, அதே காரில் தூத்துக்குடியைச் சேர்ந்த இசக்கி முத்து என்பவருடன் திருச்சி வழியாகத் தப்பிச் சென்றது தெரியவந்தது.

உடனே, போலீசார் அந்தக் காரின் எண்ணை வைத்துச் சுங்கச்சாவடி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, தனிப்படை போலீசாரை திருச்சிக்கு விரைந்து அனுப்பினர். திருச்சி பேருந்து நிலையம் அருகே நின்றிருந்த காரை மடக்கிப் பிடித்தபோது, இசக்கி முத்து காரிலிருந்து தப்பி ஓடிவிட்டார். மற்ற இருவரான ஜெபஸ்டின் மற்றும் தளவாய் மதன் ஆகியோரைப் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மேலும் 25 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.

காரின் உண்மையான பதிவு எண்ணை வைத்து விசாரித்ததில், அதன் உரிமையாளர் சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பதும், அவர் காரை வாடகைக்கு விட்டிருந்ததும் தெரியவந்தது. அந்தக் காரை ஜெபஸ்டின் போலி நம்பர் பிளேட் பொருத்தி கடத்தலுக்குப் பயன்படுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக, மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். தப்பியோடிய இசக்கி முத்துவை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.