தமிழ்நாடு

கருப்புப் பட்டியலில் 40 மருந்துகள்.. 3 நிறுவனங்கள்: TNMSC அதிரடி நடவடிக்கை!

தமிழக மருத்துவ பணிகள் கழகம் (TNMSC) தரமற்ற மருந்துகள் என 40 மருந்துகளையும், 3 மருந்து தயாரிப்பு நிறுவனங்களையும் கருப்புப் பட்டியலில் சேர்த்து உத்தரவிட்டுள்ள சம்பவம் மருத்துவ உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருப்புப் பட்டியலில் 40 மருந்துகள்.. 3 நிறுவனங்கள்: TNMSC அதிரடி நடவடிக்கை!
கருப்புப் பட்டியலில் 40 மருந்துகள்.. 3 நிறுவனங்கள்: TNMSC அதிரடி நடவடிக்கை!
அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்துகளை கொள்முதல் செய்து, பாதுகாப்பாக வைத்து, விநியோகம் செய்யும் முக்கியப் பணியை TNMSC (Tamil Nadu Medical Services Corporation Ltd) மேற்கொண்டு வருகிறது.

TNMSC வெளியிட்டுள்ள தகவலின்படி, 2023-2024 ஆம் ஆண்டில் 22 மருந்துகள் தரக்குறைபாடு காரணமாக கருப்புப் பட்டியலில் (Blacklist) சேர்க்கப்பட்டன. 2024-2025 ஆம் ஆண்டில் 26 மருந்துகள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டதில், 22 மருந்துகள் தரக்குறைபாடு காரணமாகவும், 4 தயாரிப்புகள் கொள்முதல் ஆணைகளை நிறைவேற்றாத காரணத்தினாலும் நீக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரை (2025) 14 மருந்துகள் தரக்குறைபாடு காரணமாக கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

நிறுவனங்கள் அளவில் பார்க்கும்போது, 2023-2024 ஆம் ஆண்டில் 5 நிறுவனங்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டன. இதில் இரண்டு நிறுவனங்கள் கொள்முதல் ஆணைகளை நிறைவேற்றாத காரணத்தினாலும், 3 நிறுவனங்கள் தரக்குறைபாடு காரணமாகவும் நீக்கப்பட்டன. 2024-2025 ஆம் ஆண்டில் 2 நிறுவனங்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டன. இந்த ஆண்டு இதுவரை ஒரு நிறுவனம் தரக்குறைபாடு காரணமாக கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் காரணம் என்ன?

மருந்துகள் கிடங்குகளுக்கு வரும்போதே, அங்கீகரிக்கப்பட்ட NABL ஆய்வகங்கள் மூலம் இந்திய மருந்தியல் சட்டம், பிரிட்டிஷ் மருந்தியல் சட்டம், அமெரிக்க மருந்தியல் சட்டம் போன்ற தரநிலைகளின் அடிப்படையில் பரிசோதிக்கப்படுகின்றன. ஏதேனும் குறைபாடு கண்டறியப்பட்டால், அந்த மருந்துகள் மீண்டும் மாநில அரசு ஆய்வகங்களான தேனாம்பேட்டை மற்றும் கிண்டியில் உள்ள ஆய்வகங்களில் பரிசோதிக்கப்படுகின்றன.

தரமற்ற மருந்துகள் விநியோகிக்கப்படுவதைத் தடுக்கவே இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக TNMSC அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். "தரக்குறைபாடு மற்றும் விநியோகம் செய்யாத காரணங்களுக்காகவே தயாரிப்புகள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படுகின்றன," என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், மருந்துகளின் தரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.