சென்னை, திருவான்மியூர், திருவள்ளுவர் நகர் 2-வது மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வரும் சிவசங்கரி மற்றும் அவரது கணவர் பிரசாத் ஆகியோர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். கடந்த 07.04.2025 அன்று சிவசங்கரி தனது வீட்டு பாத்ரூமை சுத்தம் செய்வதற்கு இணையதள செயலி மூலம் பதிவு செய்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து மதியம் 2 நபர்கள் சிவசங்கரியின் வீட்டிற்கு சென்று சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் பணி செய்துக் கொண்டிருந்த போது, வீட்டில் சிவசங்கரியின் வயதான மாமியாரும், அவரை கவனித்து கொள்ள (Care Taker) பெண்ணும் இருந்துள்ளனர்.
மேற்படி 2 நபர்களும் பாத்ரூம் சுத்தம் செய்துவிட்டு சென்றுவிட்ட நிலையில், மாலை வீட்டிற்கு வந்த சிவசங்கரி, மாமியார் அறையில் உள்ள பீரோவில் உள்ள நகைகளை சரிபார்த்தபோது, அதிலிருந்த சுமார் 30 சவரன் எடை கொண்ட தங்க சங்கிலி, நெக்லஸ், கம்மல் உள்ளிட்ட தங்க நகைகள் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ந்தார். இது குறித்து சிவசங்கலி, J-6 திருவான்மியூர் காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் கொடுத்ததின்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
J-6 திருவான்மியூர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை செய்தும், செல்போன் எண்களை வைத்தும் தீவிர விசாரணை செய்து, மேற்படி திருட்டில் ஈடுபட்ட திரிபுரா மாநிலத்தை சார்ந்த பிடன் மியா மற்றும் லிடன் மியா ஆகிய 2 நபர்களையும் திரிபுரா மாநிலத்தில் கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் எதிரிகள் இருவரும் மேற்படி தங்க நகைகளை திருடிக் கொண்டு தங்களது சொந்த ஊருக்கு சென்று அங்குள்ள ஒரு நகைக்கடையில் விற்று பணத்தை பிரித்துக் கொண்டதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.