விளையாட்டு

கோலி, கெய்க்வாட் சதம்: தென் ஆப்பிரிக்காவுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இந்தியா!

தென்னாப்பிரிக்காவுக்கு 359 ரன்களை இலக்காக இந்தியா அணி நிர்ணயித்துள்ளது.

கோலி, கெய்க்வாட் சதம்: தென் ஆப்பிரிக்காவுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இந்தியா!
IND vs SA
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில், விராட் கோலி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரின் சதத்தால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 358 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணிக்கு 359 ரன்கள் என்ற இமாலய இலக்கை இந்தியா நிர்ணயித்துள்ளது.

தொடரின் நிலைமையும் இன்றைய போட்டித் தொடக்கமும்

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை தென் ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் இன்று (டிசம்பர் 3) நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் (22 ரன்கள்) மற்றும் ரோகித் (14 ரன்கள்) களமிறங்கி விரைவிலேயே ஆட்டமிழந்தனர்.

கோலி, கெய்க்வாட் மற்றும் ராகுலின் அதிரடி

இதனை தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தென் ஆப்பிரிக்க பந்து வீச்சைச் சிதறடித்ததோடு, சதம் விளாசினர். ருதுராஜ் கெய்க்வாட் 105 ரன்களிலும், கோலி 102 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய கேப்டன் கே.எல். ராகுல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 43 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு

இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 358 ரன்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்கத் தரப்பில் அந்த அணியின் யான்சன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து, 359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கி விளையாட உள்ளது.