விளையாட்டு

IPL Mini Auction: காங்கிரஸ் எம்பியின் மகனை ஏலத்தில் எடுத்த கொல்கத்தா அணி!

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நேற்று நடைபெற்ற 19-வது ஐபிஎல் மினி ஏலத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பீகாரின் பூர்ணியா எம்.பி.யின் மகனான சர்தக் ரஞ்சனை ஏலத்தில் எடுத்துள்ளது.

IPL Mini Auction: காங்கிரஸ் எம்பியின் மகனை ஏலத்தில் எடுத்த கொல்கத்தா அணி!
Kolkata team buys Congress MP's son in auction
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நேற்று நடைபெற்ற 19-வது ஐபிஎல் மினி ஏலத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பீகாரின் பூர்ணியா எம்.பி.யின் மகனான சர்தக் ரஞ்சனை ஏலத்தில் எடுத்துள்ளது.

கேகேஆர் அணி ஏலம் எடுத்த வீரர்கள்

கொல்கத்தா அணி, ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீனை அதிகபட்ச தொகையான ரூ.25.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. கொல்கத்தா அணி, இந்த ஏலத்தில் மொத்தம் 13 வீரர்களை வாங்கியுள்ளது. மதீஷா பத்திரனா (ரூ.18 கோடி), முஸ்தாபிசுர் ரஹ்மான் (ரூ.9.20 கோடி), தேஜஸ்வி சிங் (ரூ.3 கோடி), ஃபின் ஆலன் (ரூ.2 கோடி), டிம் ஷெய்ஃப்ர்ட் (ரூ.1.50 கோடி), ராகுல் திரிபாதி (ரூ.75 லட்சம்), ஆகாஷ்தீப் (ரூ.1 கோடி), ரச்சின் ரவீந்திரா (ரூ.2 கோடி) ஆகியோரை கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்தது.

மேலும், தக்‌ஷா கம்ரா, சர்தக் ரஞ்சன், கார்த்திக் தியாகி, பிரசாந்த் சோலங்கி ஆகியோரைத் தலா ரூ.30 லட்சத்துக்கு கொல்கத்தா அணி வாங்கியுள்ளது.

சர்தக் ரஞ்சனின் கிரிக்கெட் பின்னணி

ரூ.30 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட சர்தக் ரஞ்சன், பீகாரின் பூர்ணியா தொகுதியின் எம்.பி.யும், காங்கிரஸின் மூத்த தலைவருமான பப்பு யாதவ் என்று அழைக்கப்படும் ராஜேஷ் ரஞ்சனின் மகன் ஆவார். உள்நாட்டுப் போட்டிகளில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் சர்தக் ரஞ்சன், இதுவரை இரண்டு முதல் தரப் போட்டிகள், நான்கு லிஸ்ட் ஏ போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

சர்தக் ரஞ்சன், இந்த ஆண்டு நடைபெற்ற டெல்லி பிரீமியர் லீக்கில் 9 இன்னிங்ஸில் களமிறங்கி 449 ரன்கள் குவித்தார். இதில் ஒரு சதமும் அடங்கும். இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையைப் படைத்தார். மேலும் இந்த சீசனில் அவரது பேட்டிங் ஆவரேஜ், 56.12 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 146.73 ஆக உள்ளது. இந்த சீசனில் மட்டும் 21 சிக்சர்கள் அடித்து கவனம் ஈர்த்துள்ளார்.