விளையாட்டு

சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரம்.. ஷிகர் தவானுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரம்.. ஷிகர் தவானுக்கு அமலாக்கத்துறை சம்மன்!
Shikhar Dhawan summoned by Enforcement Directorate
சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலி தொடர்பான வழக்கில், இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 1x என்ற அந்தச் சூதாட்ட செயலிக்கு சமூக வலைத்தளங்களில் ஷிகர் தவான் விளம்பரம் செய்ததாகக் கூறப்படும் நிலையில், இந்த விசாரணைக்கு அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, பணமோசடி தடுப்புச் சட்டம் (பி.எம்.எல்.ஏ) கீழ், ஷிகர் தவானின் வாக்குமூலத்தை அமலாக்கத்துறை பதிவு செய்யவுள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது. இந்தச் செயலி பல மக்கள் மற்றும் முதலீட்டாளர்களை ஏமாற்றியுள்ளதுடன், கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பும் செய்துள்ளதாக அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்தச் செயலியுடன் அவருக்கு உள்ள தொடர்புகள் குறித்து விசாரணை அதிகாரிகள் கேள்விகள் எழுப்பவுள்ளனர்.

ஷிகர் தவானுக்கு முன்பாக, முன்னாள் கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னாவும் இதே வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த மாதம் விசாரணை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமலாக்கத்துறையின் விரிவான விசாரணை

இந்த வழக்கில், இந்த செயலிகளுக்கும், பிரபலங்களுக்கும் உள்ள தொடர்பு, அவர்கள் பெற்ற விளம்பரக் கட்டணம் போன்றவற்றை அமலாக்கத்துறை ஆராய்ந்து வருகிறது. கடந்த ஜூலை மாதம், கூகுள் மற்றும் மெட்டா நிறுவனப் பிரதிநிதிகளையும் விசாரணைக்கு அழைத்தது. இந்த சட்டவிரோத தளங்கள், இந்திய அரசின் பல சட்டங்களை மீறுவதுடன், வரி ஏய்ப்பு மற்றும் வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக பணத்தை மாற்றுதல் போன்ற குற்றங்களிலும் ஈடுபடுகின்றன.

சூதாட்ட செயலி- பிரபலங்கள் விளம்பரம்

கடந்த 2023 ஆம் ஆண்டில், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், ஆன்லைன் சூதாட்ட தளங்களை விளம்பரப்படுத்த வேண்டாம் என செய்தி ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள், செய்தி நிறுவனங்கள் மற்றும் விளம்பர நிறுவனங்களுக்கு அறிவுரைகளை வழங்கியது. இருப்பினும், பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டுத் துறையின் பிரபலங்கள் பலரும் இந்த செயலிகளுக்கு விளம்பரம் செய்துள்ளனர். இன்னும் பல நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் 2025 ஜூன் வரை, 1,524 சட்டவிரோத சூதாட்ட இணையதளங்கள் மற்றும் மொபைல் செயலிகளுக்கு அரசு தடை உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. ஆன்லைன் சூதாட்ட சந்தையின் மதிப்பு சுமார் $100 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த செயலிகள் ஆண்டுக்கு சுமார் ₹27,000 கோடி வரி ஏய்ப்பு செய்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.