விளையாட்டு

இந்திய டெஸ்ட் அணிக்கு புது கேப்டன்.. கழட்டிவிடப்பட்ட முகமது ஷமி

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் அணியினை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய டெஸ்ட் அணிக்கு புது கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய டெஸ்ட் அணிக்கு புது கேப்டன்.. கழட்டிவிடப்பட்ட முகமது ஷமி
BCCI Announces 18 Member Squad for England Tour
டெஸ்ட் சாம்பியன்ஸ் தொடர் அறிமுகப்படுத்தப்பட்டது முதலே, டெஸ்ட் போட்டிகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறியுள்ளது. நடப்பு டெஸ்ட் சாம்பியன்ஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் முன்னேறியுள்ள நிலையில் இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாமல் போனது ரசிகர்களிடையே அதிர்ச்சியினை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தான் யாரும் எதிர்பாராத வகையில், ஏற்கெனவே டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற விராட் மற்றும் ரோகித் டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறப்போவதாக அறிவித்தனர். இந்திய அணி வருகிற ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

இந்திய அணியினை வழிநடத்தி வந்த ரோகித் ஷர்மா டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில், இங்கிலாந்து செல்லும் இந்திய அணிக்கு யார் தலைமை தாங்கப்போகிறார் என்கிற கேள்வி தான் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசுப்பொருளாகியிருந்தது. இந்நிலையில், இன்று இங்கிலாந்திற்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியினை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது பிசிசிஐ. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சுப்மன் கில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும், ரிஷப் பந்த் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணி விவரம்:

சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணை கேப்டன் & விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்.

முன்னதாக டெஸ்ட் அணியின் கேப்டன்களுக்கான பெயர் பரிந்துரையில் பும்ரா, ஜடேஜா ஆகியோரின் பெயரும் இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் மற்றும் ரஞ்சி டிராபிகளில் சிறப்பாக விளையாடி வந்த சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர் ஆகியோருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது. வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி அறுவை சிகிச்சைக்கு பின் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வந்தாலும், அவரது பந்துவீச்சு பெரிதாக சோபிக்கவில்லை. இந்நிலையில் அவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தேர்ந்தெடுக்கப்படாமல் கழட்டி விடப்பட்டுள்ளார்.

அனுபவம் வாய்ந்த வீரர்கள் குறைவாகவும், இளம் வீரர்கள் அதிகமாகவும் உள்ள இந்திய அணி இங்கிலாந்தில் புதிய வரலாற்றை படைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

டெஸ்ட் தொடரின் அட்டவணை:

முதல் டெஸ்ட்: ஜூன் 20 - ஜூன் 24, 2025, ஹெடிங்லி, லீட்ஸ் (பிற்பகல் 3:30 IST)
இரண்டாம் டெஸ்ட்: ஜூலை 2 - ஜூலை 6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்காம் (பிற்பகல் 3:30 IST)
மூன்றாம் டெஸ்ட்: ஜூலை 10 - ஜூலை 14, 2025, லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம், லண்டன் (பிற்பகல் 3:30 IST)
நான்காம் டெஸ்ட்: ஜூலை 23 - ஜூலை 27, 2025, ஓல்ட் டிராஃபர்ட், மான்செஸ்டர் (பிற்பகல் 3:30 IST)
ஐந்தாம் டெஸ்ட்: ஜூலை 31 - ஆகஸ்ட் 4, 2025, கென்னிங்டன் ஓவல், லண்டன் (பிற்பகல் 3:30 IST)