விளையாட்டு

Asia Cup 2025: ஐக்கிய அரபு அமீரகத்துடன் இந்தியா இன்று மோதல்!

துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று நடக்கும் ஆசிய கோப்பை லீக் போட்டியில் இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதுகின்றன.

Asia Cup 2025: ஐக்கிய அரபு அமீரகத்துடன் இந்தியா இன்று மோதல்!
Asia Cup 2025 - IND VS UAE
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில், இன்று இரவு 8 மணிக்கு துபாயில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, ஐக்கிய அரபு அமீரக அணியுடன் மோதுகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில், 'பி' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியாவுக்கு இது முதல் லீக் ஆட்டம்.

இந்திய அணியின் வியூகம்

'டி20' உலக சாம்பியனான இந்திய அணி அசுர பலத்துடன் உள்ளது. பேட்டிங் வரிசையில் ஷுப்மன் கில் மீண்டும் அணிக்குத் திரும்பி இருப்பதால், 'டாப்-3' வரிசையில் விளையாடக்கூடிய சஞ்சு சாம்சனின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது. தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் ஷுப்மன் கில் களமிறங்கும் பட்சத்தில், 3-வது வீரராக திலக் வர்மா விளையாடக்கூடும். ஏனெனில், அவர் இந்த இடத்தில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

4-வது இடத்தில் கேப்டன் சூர்யகுமார் யாதவும், அவரைத் தொடர்ந்து ஆல்-ரவுண்டர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் ஷிவம் துபே ஆகியோரும் களமிறங்க வாய்ப்புள்ளது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜிதேஷ் சர்மா 7-வது இடத்தில் விளையாடக்கூடும்.

பிட்ச் நிலவரமும், பந்துவீச்சாளர்களும்

துபாய் ஆடுகளம் முன்பு சுழற்பந்துவீச்சுக்கு அதிகம் ஒத்துழைத்தது. தற்போது அமைக்கப்பட்டுள்ள புதிய ஆடுகளம் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டுக்கும் ஒத்துழைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அக்சர் படேலுடன் கூடுதலாக ஒரு ஸ்பின்னர் சேர்க்கப்படலாம். பிரதான வேகப்பந்து வீச்சாளர்களாக ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் களமிறங்குவார்கள். அவர்களுக்கு உறுதுணையாக, பிரதான சுழற்பந்து வீச்சாளராக வருண் சக்ரவர்த்தி அல்லது குல்தீப் யாதவ் இடம் பெறக்கூடும்.

அமீரக அணியைப் பொருத்தவரை, கேப்டன் முகமது வசீம், ராகுல் சோப்ரா, சிம்ரன்ஜீத் சிங் போன்ற வீரா்கள், சா்வதேச களத்தில் இந்தியா உள்ளிட்ட அணிகளுக்கு எதிராக தங்களின் திறமையை சோதித்துப் பாா்க்க நல்லதொரு வாய்ப்பாக இந்தப் போட்டி அமைந்துள்ளது.

இந்திய அணியின் விவரம்

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மன் கில், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா, வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா.

ஐக்கிய அரபு அமீரக அணியின் விவரம்

முஹம்மது வசீம் (கேப்டன்), அலிஷன் ஷரபு, ஆர்யன்ஷ் ஷர்மா, ஆசிப் கான், துருவ் பராஷர், ஈதன் டிசோசா, ஹைதர் அலி, ஹர்ஷித் கவுஷிக், ஜுனைத் சித்திக், மதியுல்லா கான், முஹம்மது ஃபரூக், முஹம்மது ஜவதுல்லா, முஹம்மது ஜோஹைப், ராகுல் சோப்ரா, ரோஹித் கான், சிம்ரன்ஜீத் சிங், சாகிர் கான்.