அரசியல்

விஜயகாந்த் போல விஜய்யும் தாக்கத்தை ஏற்படுத்துவார்- டிடிவி தினகரன் பேட்டி!

“2006 ஆம் ஆண்டு தேர்தலில் விஜயகாந்த் தாக்கத்தை ஏற்படுத்தியது போல, 2026 தேர்தலில் விஜய்யும் தாக்கத்தை ஏற்படுத்துவார்” என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் போல விஜய்யும் தாக்கத்தை ஏற்படுத்துவார்- டிடிவி தினகரன் பேட்டி!
TTV Dhinakaran
கடந்த 2006-ஆம் ஆண்டு தேர்தலில் விஜயகாந்தின் தேமுதிக கட்சி எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியதோ, அதுபோல வரும் 2026 தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அனைத்துக் கட்சிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

‘ஓரணியில் இணைய வேண்டும்’

தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்லத் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட டிடிவி தினகரன், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

"அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், 75 ஆண்டுகால கட்சிகளுக்கும், 50 ஆண்டுகால கட்சிகளுக்கும் இணையாக வளர்ந்து வருகிறது. எனவே, நாங்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதில் எங்களுக்கு அவசியம் இல்லை. எங்களது இயக்கத்தை மேலும் பலப்படுத்தவே நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் தேர்தலைச் சந்தித்தால் தான் வெற்றி பெற முடியும் என்பதைத்தான் தொடர்ந்து கூறி வருகிறேன். வரும் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உறுதியாகத் தனக்கான முத்திரையைப் பதிக்கும்” என்றார்.

விஜயகாந்த் - விஜய் ஒப்பீடு

தொடர்ந்து பேசிய அவர், "கடந்த 2006 ஆம் ஆண்டு தேர்தலில் விஜயகாந்த் கட்சி தொடங்கிய போது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பது எல்லோருக்கும் தெரியும். அதுபோலவே, வரும் 2026-ஆம் ஆண்டு தேர்தலில் தவெக அனைத்துக் கட்சிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதுதான் எதார்த்தமான உண்மை. அதற்காக நான் அந்தக் கூட்டணிக்குச் செல்வதாக அர்த்தம் இல்லை."

‘ஓபிஎஸ்-ஐ சமாதானம் செய்ய வேண்டும்’

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் என்டிஏ கூட்டணிக்கு திரும்புவாரா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “ஓ. பன்னீர் செல்வம் மிகுந்த மன வருத்தத்துடன் வேறு வழியில்லாமல் கூட்டணியில் இருந்து வெளியேறினார். அவரை சமாதானப்படுத்தி கூட்டணிக்குக் கொண்டுவர டெல்லியில் உள்ள பாஜக தலைவர்கள் முயற்சிக்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.