அரசியல்

விஜய் பிரச்சாரம்.. தவெக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரிய விண்ணப்பத்தை பாரபட்சமின்றி பரிசீலிக்க டிஜிபி உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது

விஜய் பிரச்சாரம்.. தவெக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!
Case filed in the Chennai High Court on behalf of TVK
2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் மேற்கொள்ளவுள்ள தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை எந்தப் பாரபட்சமும் இன்றிப் பரிசீலிக்குமாறு காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தக் கோரி, தமிழக டிஜிபி-க்கு உத்தரவிடக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பிரச்சார அட்டவணை

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய உள்ளார். கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி திருச்சியில் தனது பிரச்சாரத்தை அவர் தொடங்கிய நிலையில், செப்டம்பர் 20 முதல் டிசம்பர் 20 வரை ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் அவர் பிரச்சாரம் செய்ய உள்ளதாகக் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் விவரம்

இதையடுத்து, பிரச்சாரத்துக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை பாரபட்சமின்றிப் பரிசீலித்து, அனுமதி வழங்க வேண்டும் என மாநிலம் முழுவதும் உள்ள காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கக் கோரி, த.வெ.க. சார்பில் கடந்த செப்டம்பர் 9 மற்றும் 15-ஆம் தேதிகளில் டிஜிபி-யிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பிரச்சாரத்துக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை எந்த பாரபட்சமும் இன்றிப் பரிசீலித்து, உயர்நீதிமன்றம் நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் அனுமதி வழங்கும்படி டிஜிபி-க்கு உத்தரவிடக் கோரி, த.வெ.க. துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

நீதிமன்ற நடவடிக்கை

இந்த வழக்கை அவசர வழக்காக இன்று பிற்பகல் விசாரிக்க வேண்டும் என நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு முறையிடப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, இந்த வழக்கு நாளை (செப்.18) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.