அரசியல்

மீண்டும் விஜய் பிரசாரம்.. சேலத்தில் அனுமதி கோரி விண்ணப்பம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு பிறகு, விஜய் சேலத்தில் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் விஜய் பிரசாரம்.. சேலத்தில் அனுமதி கோரி விண்ணப்பம்!
TVK Vijay
கரூர் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பிரசாரப் பயணம், மீண்டும் சேலத்தில் இருந்து தொடங்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக, தவெக நிர்வாகிகள் சேலம் மாநகர காவல் ஆணையரிடம் அனுமதி கோரியுள்ளனர்.

மீண்டும் பிரசாரத்தைத் தொடங்கும் திட்டம்

தவெக தலைவர் விஜய் கரூரில் பிரசாரம் மேற்கொண்டபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சோக நிகழ்வைத் தொடர்ந்து, அவர் தனது பிரசாரத் திட்டத்தை தற்காலிகமாக ரத்து செய்திருந்தார். அண்மையில், சென்னையில் நடைபெற்ற தவெக சிறப்புப் பொதுக் குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில் விஜய் பங்கேற்று பேசுகையில், தன்னுடைய அரசியல் பயணம் இன்னும் வேகமாக இருக்கும் என்று அறிவித்திருந்தார். அப்போது, திமுக மீதும் கடும் விமர்சனத்தை முன்வைத்து பேசினார்.

அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், நாமக்கல் மற்றும் கரூரில் பிரசாரம் செய்துவிட்டதால், அருகில் உள்ள மாவட்டமான சேலத்தில் இருந்து மீண்டும் பிரசாரத்தைத் தொடங்குமாறு விஜய்யிடம் விருப்பம் மற்றும் கோரிக்கை வைத்ததாகக் சொல்லப்படுகிறது. இதற்கு விஜய்யும் சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சேலத்தில் அனுமதி கோரி விண்ணப்பம்

அதன்படி, சேலத்தில் இருந்து விஜய் மீண்டும் பிரசாரத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகளில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் சார்பில், டிசம்பர் 4-ஆம் தேதி சேலத்தில் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி அளிக்கக் கோரி தவெக நிர்வாகிகள் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

சேலத்தில் போஸ் வளாகம், கோட்டை வளாகம் உள்ளிட்ட சில இடங்களைத் தேர்வு செய்து, அதில் ஒன்றில் பிரசாரம் செய்துகொள்ள அனுமதிக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. காவல்துறை அனுமதி வழங்கும் நிலையில், பிரசாரக் கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் கட்சி நிர்வாகிகள் செய்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.