அரசியல்

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை: வேல்முருகன் அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் இன்று தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை: வேல்முருகன் அதிரடி அறிவிப்பு!
Velmurugan
தமிழக சட்டமன்றத் தேர்தலில் இந்த முறை போட்டியிடப் போவதில்லை என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு பண்ருட்டி தொகுதியில் வெற்றி பெற்றவர் வேல்முருகன். இந்த முறை தனது கட்சிக்குத் தனிச் சின்னம் மற்றும் 2 தொகுதிகளை திமுகவிடம் அவர் வலியுறுத்தினார். ஆனால், ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்க முன்வந்ததால், கடந்த 22 ஆம் தேதி திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில், இந்தத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை எனத் தற்போது அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

திமுக நிர்வாகிகள் மீது அதிருப்தி

தனது முடிவு குறித்து விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ள வேல்முருகன், பண்ருட்டி தொகுதியில் திமுக நிர்வாகிகள் தன்னைத் தொடர்ந்து விமர்சித்து வந்ததைக் குறிப்பிட்டுள்ளார். கூட்டணிக் கட்சித் தலைவர் என்று கூடப் பாராமல் தன்னை விமர்சித்த நிர்வாகிகளைக் கண்டிக்க அமைச்சர்கள் முன்வராதது தமக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியதாக அவர் கூறியுள்ளார். மேலும், அரசு அதிகாரிகளை திமுக நிர்வாகிகள் அவமதித்ததும் தனது அதிருப்திக்கு ஒரு முக்கியக் காரணம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிர்வாகிகளுக்கு வாய்ப்பு

பண்ருட்டி தொகுதி மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் எங்குமே தான் போட்டியிடப் போவதில்லை என்று வேல்முருகன் தெளிவுபடுத்தியுள்ளார். தனக்குப் பதிலாகக் கட்சியின் மூத்த மற்றும் முன்னால் நின்று உழைத்த நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்க முடிவு செய்துள்ளதாகவும், அவர்களுக்காக மாநிலம் முழுவதும் தீவிரப் பிரசாரம் செய்யப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணையப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கும் வேல்முருகன், தனது கட்சியின் வளர்ச்சிக்காக இந்த முறை தேர்தல் களத்தில் நிற்காமல் பணியாற்றப் போவதாகக் கூறியுள்ளார்.