அரசியல்

4 வருடத்தில் தமிழகத்தை பின்னோக்கி கொண்டு போய்விட்டார்- முதல்வர் மீது எல்.முருகன் குற்றச்சாட்டு

"நான்கு ஆண்டுகளாக முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தின் வளர்ச்சிக்கு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கும் கேள்விக்குறியாகிவிட்டது" என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டியளித்துள்ளார்.

4 வருடத்தில் தமிழகத்தை பின்னோக்கி கொண்டு போய்விட்டார்- முதல்வர் மீது எல்.முருகன் குற்றச்சாட்டு
Stalin Has not Implemented Any Schemes for Four Years: Union Minister L. Murugan
நீலகிரி மாவட்டம் உதகையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில், "ஹர் கர் திரங்கா" (வீடுதோறும் மூவர்ணக் கொடியேற்றுதல்) யாத்திரை நடைபெற்றது. உதகை சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள காந்தி சிலை பகுதியில் தொடங்கிய இந்த யாத்திரை, ஏடிசி திடல் வரை சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைகளில் தேசியக்கொடியை ஏந்தி பேரணியாகச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர், பிரதமர் நரேந்திர மோடியின் முன்னெடுப்பில், 2047-ஆம் ஆண்டிற்குள் இந்தியா வல்லரசு நாடாக மாறுவதற்கான பயணம் மிக வேகமாகச் சென்று கொண்டிருப்பதாக அவர் கூறினார்.

"ஆபரேஷன் சிந்து"வின் வெற்றியை நாம் கண்டிருக்கிறோம் என்று குறிப்பிட்ட அவர், பாகிஸ்தானுக்கும், தீவிரவாதிகளுக்கும் சரியான பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது என்றார். மக்கள் இந்த வெற்றிகளைக் கொண்டாடும் வகையில் வீடுதோறும் தேசியக்கொடி ஏற்றியும், பேரணியாகவும் சென்று கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். நமது தேசம் "உன்னத பாரதம், ஒரே நாடு, ஒரே மக்கள்" என்ற கொள்கையின் அடிப்படையில் இந்த தேசியக்கொடி யாத்திரை நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.

முதல்வர் இவ்வளவு நாள் எங்கிருந்தார்?

தொடர்ந்து பேசிய எல்.முருகன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சியைப் பின்னோக்கி இழுத்துச் சென்றுவிட்டதாகக் குற்றம் சாட்டினார். இந்த நான்கு ஆண்டுகளாக அவர் ஆட்சியே செய்யவில்லை என்றும் கூறினார். நான்கு ஆண்டுகளாக அவர் மக்களுக்கு எந்தத் திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என்று விமர்சித்த எல்.முருகன், "நான்கு ஆண்டுகள் கழித்து உங்களுடன் ஸ்டாலின் என்று கூறுகிறாரே, இத்தனை நாட்கள் அவர் யாருடன் இருந்தார்?" என்று கேள்வியும் எழுப்பினார். மேலும், தமிழக மக்களின் நலனில் சிறிதும் அக்கறை காட்டாத திராவிட முன்னேற்றக் கழக அரசு, சட்டம் ஒழுங்கைக் கேள்விக்குறியாக்கி விட்டதாகவும் தெரிவித்தார்.

"மகளிருக்கு பாதுகாப்பு இல்லை, புகார் அளிக்க காவல் நிலையத்திற்குச் சென்றால் அங்கும் பாதுகாப்பில்லை, காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது" என்று குற்றம்சாட்டினார். எங்கு பார்த்தாலும் லஞ்சம், போதைப் பொருட்கள் மற்றும் மதுபானங்களால் இன்றைய தலைமுறையினர் சீரழிந்து வருவதாகக் கூறிய அவர், திமுக அரசை வீட்டுக்கு அனுப்பும் நாள் நெருங்கிவிட்டது என்றும், அது உறுதி என்றும் தெரிவித்தார்.