சென்னை: கடந்தாண்டை போல இந்தாண்டும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கினார் விஜய். ஆனால், இந்தாண்டு முதன்முறையாக அரசியல் கட்சி தலைவராக விஜய் இந்த விருது விழாவில் கலந்துகொண்டது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மேலும் விஜய் கண்டிப்பாக அரசியல் குறித்து பேசுவார் எனவும் சொல்லப்பட்டது. அதேபோல், விஜய் மாணவர்கள் முன் பேசியது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள விஜய், 2026 தேர்தலில் போட்டியிடவும் முடிவு செய்துள்ளார். இதனிடையே அடிக்கடி தனது கட்சி பெயரில் அறிக்கை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அதேபோல் சமீபத்தில் கூட கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயம் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்தார். மேலும், பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தவர்களிடம் நலம் விசாரித்து வந்தார் விஜய். இதனையடுத்து ஏற்கனவே அறிவித்தபடி, மாணவர்களுக்கான கல்வி விருது வழங்கும் விழாவில் விஜய் பங்கேற்றுள்ளார். தவெக சார்பில் சென்னையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவிகளுக்கு ஊக்கத் தொகையும் விருதுகளும் வழங்கி வருகிறார். திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கான்வென்ஷன் சென்டரில் மாணவர்களுக்கான பாராட்டு விழா நடக்கிறது.
இதில், அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கு தவெக சார்பில் காலை உணவு வழங்கப்பட்டதை அடுத்து, விருது வழங்கும் நிகழ்வு தொடங்கியது. தமிழ்த் தாய் வாழ்த்துடன் ஆரம்பித்த இந்நிகழ்ச்சியில் விஜய் சில நிமிடங்கள் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டிற்கு நல்ல தலைவர்கள் தேவை, அரசியல் மட்டுமின்றி மற்ற துறைகளில் நல்ல தலைவர்கள் வேண்டும். நம்மிடம் நல்ல மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள் என பலரும் உள்ளனர். ஆனால், அரசியலையும் ஒரு கேரியராக நாம் பார்ப்பதே இல்லை எனக் கூறினார்.
அதேபோல், படிச்சவங்க அரசியலுக்கு வரணுமா வேண்டாமா என மாணவர்களிடம் கேள்விக் கேட்ட விஜய், நல்லா படிச்சவங்க அரசியலில் தலைவர்களாக வேண்டும் எனவும் அட்வைஸ் செய்தார். மாணவர்கள் படித்துக்கொண்டிருக்கும் போதே மறைமுகமாக அரசியலில் ஈடுபட வேண்டும். தினமும் செய்தித் தாள்கள் படித்தாலே நமக்கு பல விஷயங்கள் புரியும். ஒரே செய்தியை ஒரு பத்திரிக்கை ஒரு மாதிரியாகவும், இன்னொரு செய்தித்தாள் வேறு மாதிரியாகவும் எழுதுகின்றன. எந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், எது முக்கியமில்லை என்பது ஒவ்வொரு செய்தித் தாள்களுக்கும் ஏற்ப மாறுபடும். அதனால் நாம் தான் அதன் பின்னணி என்ன, ஏன் அப்படி என்பது குறித்து சிந்திக்க வேண்டும் என்றார்.
மேலும் சமூக வலைத்தளங்களில் பரவும் பொய்யான போலியான செய்திகள் குறித்த உண்மையை மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். எதையும் கண்மூடித்தனமாக நம்பக் கூடாது என அட்வைஸ் செய்தார். அதேபோல், தங்களது ஆதயத்துக்காக அரசியல் கட்சிகளின் பொய்யான பரப்புரைகளை நம்ப வேண்டாம் எனவும் கோரிக்கை வைத்தார். கடந்தாண்டு மாணவர்கள் முன் பேசிய விஜய், தனுஷின் அசுரன் பட வசனத்தை மேற்கொள் காட்டியிருந்தார். மேலும், காமராஜர், பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்கள் குறித்து படிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். ஆனால், இந்தமுறை மாணவர்களே அரசியலில் களமிறங்க வேண்டும், தலைவர்கள் ஆக வேண்டும் என பேசியுள்ளது கவனம் ஈர்த்துள்ளது. அதாவது மாணவர்களை எதிர்காலத்தில் தனது கட்சியின் வக்காளர்களாக மாற்ற விஜய் அடிபோட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.