அரசியல்

’இரட்டை இலக்கு தாங்க..இல்லாக்காட்டி போங்க...’ - சீட்டுக்கு செட்டிங்..? காத்திருக்கும் காம்ரேட்கள்..! தலைவலியில் தலைமை?

தமிழக அரசியல் களத்தில் ’ஆட்சி, அதிகாரத்தில் பங்கு’ என கொளுத்திப்போடப்பட்ட திரி அறிவாலயத்தில் புகையத் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால், விசிக, காங்கிரஸை தொடர்ந்து காம்ரேட்களும் பல டிமாண்டுகளை திமுக தலைமையிடம் வைப்பதாக கூறப்படுகிறது. அந்த டிமாண்ட் என்ன? திமுக எடுக்கப்போகும் முடிவு என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

கடந்த ஆண்டில் புதுக்கட்சி ஆரம்பித்த விஜய் விக்கிரவாண்டி மாநாட்டில் பேசும்போது, 'கூட்டணிக்கு வருவோருக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என பற்றவைக்கவே, ஆளும் தி.மு.க. அதிர்ந்து போனது. இந்த நிலையில்தான், கூட்டணியை முறித்துக்கொண்டிருந்த அதி.மு.கவுடன் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் பா.ஜ.க. கூட்டணியை உறுதி செய்யவே, தி.மு.கவிற்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 'கூட்டணி ஆட்சி' என்ற அமித் ஷாவின் இந்த அறிவிப்பு, தமிழகத்தில் திமுக கூட்டணியிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது முன்பு விசிகவும், காங்கிரசும் திமுக தலைமையிடம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டு குடைச்சல் கொடுத்ததாக கூறப்பட்ட நிலையில், அந்த வரிசையில் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்துள்ளதாக கூறப்படும் தகவல் தான் தற்போது அறிவாலயத்தின் ஹாட் டாபிக்..

அண்மையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு மதுரையில் நடைபெற்றது ஆறு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டிற்குப் பிறகு தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக தனியே ஆலோசிக்கப்பட்டது. மேற்கு வங்கம், திரிபுரா மாநிலங்களில் ஆட்சியை இழந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் தடுமாறி வருகிறது.

தற்போது ஆட்சியிலிருக்கும் ஒரே மாநிலமான கேரளாவிலும் அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பது கடினம் என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. இதனால் கட்சியின் அங்கீகாரத்திற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆகவே, தேர்தல் ஆணைய விதிகளை பூர்த்தி செய்ய மாநிலங்களில் அதிக எம்.எல்.ஏ.க்கள் தேவைப்படுகிறார்கள். ஆகவே, 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்திலும் ஆட்சியில் பங்கெடுப்பது அவசியம் என தமிழக நிர்வாகிகள் பலரும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

அதனால் ஆட்சியில் பங்கு பெறுவதோடு, ஒற்றை இலக்கத்திற்கு பதிலாக இரட்டை இலக்கத்தில் தொகுதியை திமுகவிடம் கேட்டுப் பெறவேண்டும் என இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக காம்ரேட்கள் முணுமுணுக்கின்றனர். இதனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இரட்டை இலக்கத்தில் தொகுதியை கேட்டுப் பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. காம்ரேட்களின் இந்த திடீர் எழுச்சியால் திமுக தலைமை தலைவலியில் இருப்பதாகவும் சொல்கின்றனர் உடன்பிறப்புகள்..

இந்நிலையில், காம்ரேட்கள் கேட்கும் தொகுதிகள் ஒதுக்கப்படுமா? அல்லது அப்படி ஒதுக்கப்படாத பட்சத்தில் திமுக உடனான கூட்டணியை சிபிஎம் முறித்துக்கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்...