பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் மீதான கலால் வரி ஒவ்வொரு லிட்டருக்கும் 2 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. கலால் வரியானது மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் நிலையில், கலால் வரி உயர்த்தப்பட்டதால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படலாம்? என வாகன ஓட்டிகள் அச்சத்தில் இருந்தனர்.
மத்திய அரசு விளக்கம்
இதற்கு விளக்கமளித்த மத்திய அரசு, “இன்று பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு தலா 2 ரூபாய் உயர்த்தியிருந்தாலும் பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விலைகளில் எந்த மாற்றமும் இருக்காது. கலால் வரி உயர்வை எண்ணெய் நிறுவனங்களே (PSU Oil Marketing Companies) ஏற்றுக் கொள்ளும்” என தெரிவித்தது. இந்த அறிவிப்பால் பொதுமக்கள் நிம்மதியடைந்த நிலையில் அவர்களது தலையில் பேரிடி விழுவது போன்று அடுத்த அறிவிப்பு வெளியானது.
சிலிண்டர் விலை உயர்வு
அதன்படி, வீட்டு உபயோக சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்படுவதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்தார். இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.803-ஆக இருக்கும் நிலையில் 50 ரூபாய் அதிகரிப்பதன் மூலம் இனி ரூ.853 ஆக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த சில நாட்களில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி மற்றும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு பேரதிர்ச்சியை தந்துள்ளது.
மு.க.ஸ்டாலின் கண்டனம்
இந்நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்விற்கு கண்டம் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், "நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது அவர்களது வயிறு எரிய வேண்டுமா? "உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும்" என்பது, பாஜக அரசுக்கு மிகவும் பொருந்தும்!
உலக அளவில் #CrudeOil விலை சரிந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காவிட்டாலும் பரவாயில்லை, விலையை ஏற்றாதீர்கள் எனக் கெஞ்சும் பரிதாப நிலைக்கு நாட்டு மக்களைத் தள்ளிவிட்டார்களே!? வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல், சமையல் சிலிண்டர் விலை உயர்வு அமைந்திருக்கிறது.
மக்களே… அடாவடியாக விலையை உயர்த்திவிட்டு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதில் சிறு பகுதியைக் குறைத்து நாடகம் ஆடுவது பாஜக-வின் வழக்கமாகிவிட்டது! இந்த நாடகத்தைப் பார்த்துப் பார்த்து நமக்கும் பழக்கமாகிவிட்டது! ஒன்றிய பாஜக அரசே... தேர்தல் ஏதாவது வரும் வரை காத்திராமல், இந்த விலை உயர்வை உடனே திரும்பப் பெறுக!” என்று குறிப்பிட்டுள்ளார்.
அரசியல்
சிலிண்டர் விலை உயர்வு: அடுப்பு எரிய வேண்டுமா? மக்களின் வயிறு எரிய வேண்டுமா? மு.க.ஸ்டாலின் கண்டனம்
வீட்டு உபயோக சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரித்துள்ள நிலையில் 'நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது அவர்களது வயிறு எரிய வேண்டுமா?’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.