அரசியல்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்.. "சதி செய்தவர்கள் குடும்பம் விளங்காது"- செல்லூர் ராஜூ

"கரூர் சம்பவத்தில் யார் சதி செய்திருந்தாலும் அவர்கள் குடும்பம் விளங்காது" என்று செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்..
Sellur Raju
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரசாரத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சம்பவம் மிகுந்த மனவேதனையையும், வயிற்றெரிச்சல் மற்றும் ஐயத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

விஜய் குறித்து விமர்சனம் கூடாது

விஜய் இப்போதுதான் அரசியலுக்கு வந்துள்ளார் என்றும், அரசியலைப் பொறுத்தவரை அவர் புதுமுகம் என்றும் குறிப்பிட்ட செல்லூர் ராஜூ, அதனால் அவரை ஆளாளுக்கு விமர்சனம் செய்யக்கூடாது என்று தெரிவித்தார். ஏற்கனவே கரூர் சம்பவத்தில் விஜய் மீது அதிகமாகவே விமர்சனங்கள் வந்துவிட்டதாகவும் அவர் கூறினார். த.வெ.க. தலைவர் விஜய் மாவட்டந்தோறும் பஸ்சில் செல்லாமல், இனிமேல் ஒவ்வொரு தொகுதி வாரியாகச் செல்ல வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

கரூர் சம்பவம் - 'குடும்பம் விளங்காது'

கரூர் சம்பவத்தில் அப்பாவிப் பெண்களும், குழந்தைகளும் மரணம் அடைந்த துயரத்தில், இத்தனை உயிர்கள் பறிபோனதற்குப் பின்னால் அரசியல் சதி இருக்கிறதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று செல்லூர் ராஜூ வலியுறுத்தினார். இத்தனை உயிர்களைக் காவு கொடுத்த நிகழ்வுக்கு யார் சதி செய்திருந்தாலும் அவர்கள் குடும்பம் விளங்காது என்றும் அவர் கூறினார்.

திமுக அரசு மீது குற்றச்சாட்டு

இந்தச் சம்பவத்திற்கு காவல்துறை அனுமதி அளித்ததில் ஏற்பட்ட குளறுபடியும் ஒரு காரணம் என்று செல்லூர் ராஜூ குற்றம் சாட்டினார். த.வெ.க.வினர் கேட்ட இடத்தில் போலீசார் அனுமதி கொடுக்கவில்லை என்றும், 10 ஆயிரம் பேர் கூடும் இடத்தில் 27 ஆயிரம் பேர் திரண்டதால் தான் இது போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

கரூரில் அதே இடத்தில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்ய அனுமதி கேட்டபோது, அந்த இடத்தில் நெரிசல் ஏற்படும் என போலீசார் அனுமதி மறுத்தனர் என்றும், பின்னர் அனுமதி கொடுத்தனர் என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல, த.வெ.க.வினர் கேட்டபோது அந்த இடத்தில் அனுமதியை மறுத்து வேறு அகலமான இடத்தை அவர்களுக்குக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், போலீசார் அப்படிச் செய்யவில்லை என்று அவர் கூறினார்.

மேலும், விஜய் காலதாமதமாக அந்தப் பகுதிக்கு வந்ததனால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும், சம்பவம் நடந்தவுடன் உடனடியாக விசாரணை ஆணையத்தை தி.மு.க. அரசு நியமித்தது எப்படி? என்றும் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பினார்.