அரசியல்

புதிய கல்விக் கொள்கை சர்ச்சை உதயநிதி Vs தர்மேந்திர பிரதான்! அரசியல் செய்வது யார்?

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க முடியாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொன்னது, பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளதோடு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் Vs தர்மேந்திர பிரதான் என அரசியலாக மாறியுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

புதிய கல்விக் கொள்கை சர்ச்சை உதயநிதி Vs தர்மேந்திர பிரதான்! அரசியல் செய்வது யார்?
புதிய கல்விக் கொள்கை சர்ச்சை உதயநிதி Vs தர்மேந்திர பிரதான்! அரசியல் செய்வது யார்?

இருமொழிக் கொள்கையை பின்பற்றும் தமிழ்நாட்டிற்கு, மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை நிதி ஒதுக்க முடியாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான கூறியது மாநிலம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 

மத்திய அமைச்சரின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  "மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது" என்று blackmail செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்! எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம்! உங்கள் தனிச்சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்...” என்று எச்சரிக்கைவிடுத்திருந்தார். 

தொடர்ந்து, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், நிதி ஒதுக்காமல் கட்டாயப்படுத்தி தமிழ்நாட்டை சீண்டுவதும், தீயை தீண்டுவதற்கு சமம் என்றும், ரொம்பவும் வேண்டாம் - சுதந்திரத்துக்கு பிறகான தமிழ்நாட்டின் வரலாற்றைப் படித்தாலே இது உங்களுக்குப் புரியும் என்றும் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். 

மேலும், “மாநிலங்கள் சேர்ந்து உருவாக்கியது தான் ஒன்றிய அரசு. எங்கள் குழந்தைகளின் கல்விக்கான நிதியை தான் நாங்கள் கேட்கிறோம். நீங்கள் கொடுக்கும் இடத்திலும் நாங்கள் பெறும் இடத்திலும் இருப்பதாய் நினைத்து தலைக்கனம் காட்ட வேண்டாம். தமிழ்நாடு பொறுக்காது" என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருந்தார். 

முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் கருத்துக்களுக்கு விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தமிழ்நாட்டில் ஒரு மாணவர் கல்வியில் பன்மொழி அம்சத்தைக் கற்றுக்கொண்டால் அதில் என்ன தவறு இருக்கிறது? தமிழ், ஆங்கிலம் மற்றும் ஏதாவது ஓர் இந்திய மொழி என்பதைதான் தேசிய கல்விக் கொள்கை சொல்கிறது. இந்தியோ அல்லது வேறு எந்த ஒரு மொழியுமோ திணிக்கப்படவில்லை. தமிழ்நாட்டு நண்பர்கள் இதை அரசியலாக்க முயல்கிறார்கள். தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது”என்று விளக்கம் அளித்தார். 

இதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதினார். அதில், ”#NEP2020-ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தி, மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் எங்கள் தமிழ்நாட்டு மாணவர்களுக்கான #SamagraShiksha நிதி ஒதுக்கப்படும் என்பது எவ்விதத்தில் நியாயம்? தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பில்லையா? இருவேறு திட்டங்களுக்கு முடிச்சுப் போட்டு கல்விக்கான நிதியை முடக்குவது அறமா? இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து தாங்கள் உடனடியாகத் தலையிட்டு, தமிழ்நாட்டுக்கான 2,152 கோடி ரூபாய் நிதியை விடுவிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தார். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடித்ததிற்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதாக உள்ளது. தேசியக் கல்விக் கொள்கையுடன் இணைந்ததுதான் ‘சமக்ரா சிக்சா’ திட்டம். பாஜக ஆட்சி செய்யாத பல மாநிலங்கள் கூட தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளன. எனவே தமிழ்நாடும் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும். கல்வியை அரசியலாக்க வேண்டாம். கடந்த 1968ல் தொடங்கி இந்தியக் கல்வித் திட்டத்தின் முதுகெலும்பாக மும்மொழிக் கொள்கை உள்ளது. தேசிய கல்விக் கொள்கையைக் குறுகிய பார்வையுடன் பார்ப்பது பொருத்தமற்றது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுதொடர்பாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ள மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ”கல்வியை அரசியலாக்கக் கூடாது. தவறாகச் சித்தரிக்கப்பட்ட உண்மை எந்த பிரச்சினையையும் தீர்க்கப்போவதில்லை... சொல்லப்போனால் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களும் இதை ஏற்றுக்கொண்டு, அமல்படுத்துகின்றன. மத்திய அரசுடன் இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டுள்ளன. புதிய கல்வி கொள்கையை ஏற்க மறுப்பதால் தமிழக அரசு 2500 கோடி ரூபாயை மட்டுமில்லை.. ரூ.5000 கோடியை இழக்கிறது” என தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், கல்வியை அரசியலாக்க வேண்டாம் என்ற மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கடித்ததிற்கு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். 

இப்படி, புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் வார்த்தைப் போர் நடத்திக் கொண்டிருப்பதால், மாணவர்களின் எதிர்காலம் என்பதை தாண்டி இது பாஜக Vs திமுக என அரசியலாக்கப்பட்டு வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு விரைவிலேயே முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.