அரசியல்

பாஜகவை கூட்டணியிலிருந்து கழட்டிவிட அதிமுக தயாரா? - திருமாவளவன் கேள்வி!

சென்னை, அக்டோபர் 11: தமிழக வெற்றிக் கழகத்துடன் (த.வெ.க.) கூட்டணி அமைப்பது குறித்து அதிமுகவினர் பரப்பி வரும் தகவல் வதந்திதான் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (வி.சி.க.) தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவ்வாறு கூட்டணி அமைப்பதென்றால், பாஜகவை அந்தக் கூட்டணியில் இருந்து கழட்டிவிட அதிமுக தயாராகிவிட்டதா என்றும் அவர் கடுமையான கேள்வியை எழுப்பியுள்ளார்.

பாஜகவை கூட்டணியிலிருந்து கழட்டிவிட அதிமுக தயாரா? - திருமாவளவன் கேள்வி!
பாஜகவை கூட்டணியிலிருந்து கழட்டிவிட அதிமுக தயாரா? - திருமாவளவன் கேள்வி!
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தை (த.வெ.க) தங்கள் பக்கம் இழுக்க அதிமுகவும், பாஜகவும் மறைமுகமாக முயற்சி மேற்கொண்டு வருகின்றன. சமீபத்தில் கரூரில் நடந்த த.வெ.க. பரப்புரைக் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு, அதிமுக, த.வெ.க.வுக்கு சப்போர்ட் செய்து வருவதாகவும், எடப்பாடி பழனிசாமியின் பரப்புரைகளில் த.வெ.க. கொடி இடம்பெறுவதாகவும் கூறப்படுகிறது. இதுவே அதிமுக - த.வெ.க. கூட்டணி அமையலாம் என்ற பேச்சுக்கு வித்திட்டுள்ளது.

விஜய் நிலைப்பாடு:

த.வெ.க.வின் நிலைப்பாடு விஜய் தலைமையில் தான் கூட்டணி என்றும், விஜய்தான் முதல்வர் வேட்பாளர் என்றும் உறுதியாக உள்ளது. மேலும், பாஜகவை கொள்கை எதிரி என்று வெளிப்படையாகக் கூறிவரும் விஜய், அக்கட்சியுடன் கூட்டணியில் உள்ள அதிமுகவுடன் இணைவது சந்தேகமே என்று அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

திருமாவளவன் விமர்சனம்:

இந்தச் சூழலில், வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, இந்தக் கூட்டணி விவகாரம் குறித்துக் கருத்து தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி என்பது அதிமுக பரப்பும் வதந்திதான். அதிமுக ஏற்கெனவே பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் நிலையில், கொள்கை ரீதியாகத் த.வெ.க.வுக்கு எதிரியாக இருக்கும் பாஜக கூட்டணியை ஏற்றுக்கொண்டு அந்தக் கட்சி எவ்வாறு வரும்? அப்படியென்றால், பாஜகவை அதிமுக கூட்டணியில் இருந்து கழட்டிவிடுமா என்பது தெரியவில்லை. அவ்வாறு கழட்டிவிட்டால், அதிமுகவின் கூட்டணியின் நம்பகத்தன்மை கேள்விக்கு உள்ளாகும்.

மேலும், அதிமுக - த.வெ.க. கூட்டணி திமுக கூட்டணிக்குப் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு, "யூகத்திற்குப் பதில் கூற முடியாது" என்று அவர் மறுத்துவிட்டார்.

விஜய் பாதுகாப்பு:

கரூர் சம்பவத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கச் சென்ற விஜய், தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது குறித்துக் கேட்டபோது, த.வெ.க. தலைவர் விஜய் மக்கள் செல்வாக்கு மிக்கவர். அவர் செல்லும்போது பாதுகாப்புத் தேவைதான். அவர் கோரிக்கை வைத்ததில் எந்தத் தவறும் இல்லை" என்று திருமாவளவன் ஆதரித்துப் பேசியுள்ளார்.