Tamil Nadu CM Stalin Return From America : தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க கடந்த மாதம் 27ம் தேதி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். சுமார் 17 நாட்கள் அமெரிக்காவில் இருந்த அவர் இன்று சென்னை திரும்பினார். சென்னை வந்தடைந்த முதல்வர் ஸ்டாலினை அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், கே.என். நேரு, எ.வ வேலு, பொன்முடி, ஐ.பெரியசாமி, எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன் உள்பட ஏராளமான திமுகவினர் பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.
இதனைத் தொடந்து முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். ’அனைவரும் நல்லா இருக்கீங்களா? நான் நல்ல இருக்கிறேன்’என்று தனது பேச்சை தொடங்கிய முதல்வர் ஸ்டாலின், வெளிநாட்டு பயணம் வெற்றிகரமாகவும், சாதனை மிகுந்த பயணமாகவும் அமைந்தது என பெருமிதம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ‘’அமெரிக்க பயணத்தின்போது உலகின் புகழ்பெற்ற தலைசிறந்த 25 நிறுவனங்களுடன் சந்திப்பு நடத்தப்பட்டது. 19 முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன்மூலம் மொத்தம் ரூ.7,618 கோடி மதிப்பிலான முதலீடு தமிழ்நாட்டுக்கு வந்துள்ளது.
தமிழ்நாடு அரசு அளித்த நம்பிக்கையை ஏற்று ford நிறுவனம் மீண்டும் தமிழ்நாட்டில் மீண்டும் உற்பத்தியை தொடங்க உள்ளது. அந்த நிறுவனம் உற்பத்தியை தொடங்க அனைத்து உதவிகளும் செய்ய உத்தரவிட்டுள்ளேன். மேலும் பல்வேறு நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளன. எனது கனவு திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கான பயிற்சி வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது. ஒப்பந்தங்கள் செய்துள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.
அப்போது ’முதல்வர் ஸ்டாலின் வெளிநாடுகளில் செய்து கொண்ட முதலீட்டு ஒப்பந்தங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளாரே’ என்று முதல்வரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஸ்டாலின், ‘’தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் செய்யப்பட்ட முதலீடுகள் குறித்து நான் விளக்கமாக கூறியுள்ளேன். இது குறித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவும் விளக்கம் அளித்துள்ளார். அதிமுக ஆட்சியில் முதலீடுகளை ஈர்க்க எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சென்றபோது, 10 விழுக்காடு அளவிலான முதலீடுகள் கூட ஈர்க்கப்படவில்லை. இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதை வெளியில் சொன்னால் அவருக்கு அவமானமாக இருக்கும்’’ என்று தெரிவித்தார்.
இதேபோல், ’முதல்வர் ஸ்டாலினின் அமெரிக்க பயணத்தில் எதிர்பார்த்த முதலீடுகள் வரவில்லை’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டி இருந்தார். இது தொடர்பான கேள்விக்கு பதில் கூறிய மு.க.ஸ்டாலின், ’இது அரசியல் நோக்கத்தோடு கூறப்படும் குற்றச்சாட்டு’ என்று தெரிவித்தார்.