அரசியல்

Nirmala Sitharaman : 'நிர்மலா சீதாராமனின் செயல் வெட்கக்கேடு’..சட்டென பேசிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன விஷயம்?

CM Stalin About Nirmala Sitharaman Issue : ''ஒரு தொழில் அதிபராக ஜிஎஸ்டி தொடர்பாக சந்தேகங்கள் எழுப்ப அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசனுக்கு முழு உரிமை உள்ளது. அவருக்கு பதில் கூற வேண்டியது மத்திய நிதியமைச்சரின் கடமை. ஆனால் கேள்வி எழுப்பிய சீனிவாசனை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்தது மத்திய அரசின், நிர்மலா சீதாராமனின் அதிகார வர்க்கத்தின் மனோபாவத்தையே காட்டுகிறது'' என்று பலரும் குற்றம்சாட்டினார்கள்

Nirmala Sitharaman : 'நிர்மலா சீதாராமனின் செயல் வெட்கக்கேடு’..சட்டென பேசிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன விஷயம்?
MK Stalin And Nirmala Sitharaman

CM Stalin About Nirmala Sitharaman Issue : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி தொடர்பாக தொழில்துறையினரைச் சந்தித்து அவர்களின் சந்தேகங்கள், பரிந்துரைகளை தொடர்ந்து கேட்டு வருகிறார். அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு கோவை வந்திருந்த நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி தொடர்பாக தொழில் அதிபர்களை சந்தித்து பேசினார்.  தொழில் துறையில் ஜிஎஸ்டியில் உள்ள பிரச்சனைகள், ஜிஎஸ்டியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து தொழில் அதிபர்கள் நிர்மலா சீதாராமனிடம் எடுத்துரைத்தனர்.

அப்போது பேசிய அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குநரும், உரிமையாளருமான சீனிவாசன், ''பேக்கரியில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு உணவுகளுக்கும் ஒவ்வொரு விதமான ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இனிப்பு தின்பண்டங்களுக்கு 5% வரியும், காரத்திற்கு 12 சதவீத வரியும் விதிக்கப்படுகிறது. பன்னுக்கு வரி இல்லை. ஆனால் அதில் இனிப்பு க்ரீம் கலந்தால் 18% ஜிஎஸ்டி ஆகிவிடுகிறது.

இப்படி உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி விகிதம் வேறுபடுவதால் கம்ப்யூட்டரே திணறுகிறது. மேலும் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களும் நீங்கள் பன் கொடுங்கள்; நாங்கள் க்ரீம் வைத்துக் கொள்கிறோம் என்று கூறுகிறார்கள். ஆகவே அனைத்து உணவுப்பொருட்களுக்கும் ஒரே விதமான வரி விதிப்பை கொண்டு வர வேண்டும்'' என்று கூறினார்.  சீனிவாசனின் இந்த பேச்சு சமூகவலைத்தளங்களில் வைரலானது. ''ஜிஎஸ்டியால் மக்கள் மட்டுமின்றி தொழில் துறையினரும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அதையே சீனிவாசன் வெளிப்படுத்தியுள்ளார்'' என்று கருத்துகளை பகிர்ந்து வந்தனர். 

இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த நிர்மலா சீதாராமன், ''ஹோட்டல் உரிமையாளர் பேசியதில் தவறில்லை. அவர் தங்களின் பிரச்னையை ஜனரஞ்சகமாக, தன்னுடைய ஸ்டைலில் பேசியிருக்கிறார். ஒவ்வொரு உணவுக்கும், எவ்வளவு வரி நிர்ணயிக்க வேண்டும் என்பது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில் விரிவாக ஆய்வு மேற்கொண்டுள்ளது. விமர்சனங்களை பற்றி நான் கவலைப்படுவதில்லை'' என்று கூறியிருந்தார். 

இதன்பிறகு, தான் பேசியது குறித்து அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் சீனிவாசன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ வைரலாக பரவியது. 'நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவன் இல்லை. தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்’ என்று  சீனிவாசன் கூறுவதுபோல் வீடியோ காட்சியில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோவை பார்த்து திமுகவினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் பொங்கியெழுந்தனர்.

''ஒரு தொழில் அதிபராக ஜிஎஸ்டி தொடர்பாக சந்தேகங்கள் எழுப்ப சீனிவாசனுக்கு முழு உரிமை உள்ளது. அவருக்கு பதில் கூற வேண்டியது மத்திய நிதியமைச்சரின் கடமை. ஆனால் கேள்வி எழுப்பிய சீனிவாசனை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்தது மத்திய அரசின்,  நிர்மலா சீதாராமனின் அதிகார வர்க்கத்தின் மனோபாவத்தையே காட்டுகிறது'' என்று அவர்கள் குற்றம்சாட்டினார்கள். மேலும் அதிமுகவும் நிர்மலா சீதாராமனின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தது. 

இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம்,  நிர்மலா சீதாராமன்-அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், ''ஜிஎஸ்டி குறித்த தொழில் முனைவோரின் நியாயமான கோரிகைகளை அவர் முன்வைத்தார். இதை ஒன்றிய நிதியமைச்சர் கையாண்ட விதம் வெட்கப்பட வேண்டிய ஒன்று’’ என்று தெரிவித்துள்ளார்.