அரசியல்

ஆணவக் கொலைக்கு எதிராகச் சிறப்புச் சட்டம்: திருமாவளவன் வலியுறுத்தல்!

“ஆணவக் கொலைகளுக்கு எதிராகச் சிறப்புச் சட்டத்தை தைரியமாகக் கொண்டுவர வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலினுக்கு திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆணவக் கொலைக்கு எதிராகச் சிறப்புச் சட்டம்: திருமாவளவன் வலியுறுத்தல்!
Thirumavalavan
தமிழகத்தில் நடைபெறும் ஆணவக் கொலைகளைத் தடுக்க, மத்திய, மாநில அரசுகள் சிறப்புச் சட்டம் இயற்ற வலியுறுத்தி, பெரம்பலூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆணவக் கொலைகளுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

இந்த ஆர்ப்பாட்டத்தில், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட விசிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக, ஆணவக் கொலையால் உயிரிழந்த கவின் மற்றும் செல்வகணேஷ் ஆகியோருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஆணவக் கொலை வழக்குகளைச் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 1 கோடி இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

அரசியல் கட்சிகளுக்கு திருமாவளவன் கண்டனம்

ஆர்பாட்டத்தில் திருமாவளவன் பேசும்போது, "ஆணவக் கொலை என்பது வெறும் மாநிலப் பிரச்சனை அல்ல, அது ஒரு தேசியப் பிரச்சனை. டெல்லியைச் சுற்றியுள்ள மாநிலங்களிலும் இது அதிகரித்து வருகிறது. இந்தக் கொடுமைகளுக்கு எதிராக, 40 ஆண்டுகளாக விசிக மட்டுமே போராடி வருகிறது" என்று கூறினார்.

நடிகரும் தவெக தலைவருமான விஜய், கவின் ஆணவக் கொலையைக் கண்டிக்கக்கூட இல்லை. அதேபோல், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கண்டனம் தெரிவிக்கவில்லை. ஒடுக்கப்பட்டவர்களின் வாக்கு வேண்டும், ஆனால் அவர்களின் பிரச்சனைகளுக்குப் பேசத் தேவையில்லை என்ற இறுமாப்பில் இவர்கள் அரசியல் செய்கிறார்கள்" என்று அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், "நாமெல்லாம் இந்துக்கள் என்று சொல்லும் பா.ஜ.க., கவின் கொலையைக் கண்டிக்காதது ஏன்?" என்று கேள்வி எழுப்பிய திருமாவளவன், பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். தோன்றுவதற்கு முன்பே, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த மண்ணில் ஆணவக் கொலைகள் இருந்துள்ளதாகத் தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை

இந்த ஆர்ப்பாட்டம் தி.மு.க.விடம் அதிக இடங்களைக் கேட்பதற்காக நடத்தப்படவில்லை என்றும், சட்டம் இயற்றும் அதிகாரம் உள்ள தமிழக அரசை வலியுறுத்தி நடத்தப்படுகிறது என்றும் திருமாவளவன் தெரிவித்தார். "அனைத்துச் சாதியினரும் எதிர்ப்பார்கள் என்று எண்ணாமல் அண்ணா கொண்டுவந்த சாதி மறுப்புத் திருமணச் சட்டத்தைப்போலவும், கலைஞரால் கொண்டுவரப்பட்ட அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆக்கும் சட்டத்தைப்போலவும், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணவக் கொலைகளுக்கு எதிராகச் சிறப்புச் சட்டத்தை தைரியமாகக் கொண்டுவர வேண்டும்" என்று அவர் கோரிக்கை விடுத்தார்.