அரசியல்

MK Stalin Ooty Visit : செல்லூர் ராஜூ ஒரு கோமாளி.. நோஸ் கட் செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

CM MK Stalin Speech About Sellur Raju : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக இராணுவ வீரர்களை அவமதிக்கும் வகையில் செல்லூர் ராஜூ பேசியிருந்த நிலையில், ”அவர் ஒரு கோமாளி..அவர் பேசுவதை பெரிதுப்படுத்த விரும்பவில்லை” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

MK Stalin Ooty Visit : செல்லூர் ராஜூ ஒரு கோமாளி.. நோஸ் கட் செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
sellur raju is a clown nost cut by chief minister mk stalin
CM MK Stalin Speech About Sellur Raju : 5 நாள் சுற்றுப்பயணமாக உதகை வருகை புரிந்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். மேலும் நாளை நடைபெற இருக்கும் 127-வது மலர் கண்காட்சியினையும் தொடங்கி வைக்க உள்ளார்.

இதனிடையே, இன்று காலை அரசு தாவரவியல் பூங்கா அருகே உள்ள சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட திறந்தவெளி மைதானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்த முதல்வர் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் சிந்தூர் ஆபரேஷன் மிக சிறப்பாக இருந்தது என குறிப்பிட்ட முதல்வர், ”பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் திமுக ஆட்சிக்கு வந்தால் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் எனக் கூறியிருந்தேன், 2019 மக்களவைத் தேர்தலின் போது குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என உறுதி அளித்தேன். நேற்று குற்றவாளிகள் நீதிமன்றத்தின் வாயிலாக தண்டிக்கப்பட்டுள்ளனர்” என பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்து கருத்து தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய முதல்வர், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து பொய்களை மட்டுமே கூறி வருகிறார் எனவும் குறிப்பிட்டார். கோடநாடு வழக்கிலும் மிக விரைவில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் எனவும் முதலமைச்சர் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

”ஒவ்வொரு இந்தியர்களும் பாரத பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், அமித்ஷாவிற்கு தான் நன்றி சொல்ல வேண்டும். இதை விட்டுட்டு ராணுவ வீரர்களா எல்லையில் போய் சண்டையா போட்டாங்க. இன்னைக்கு இருக்கிற தொழில் நுட்பத்திற்கு ஏற்ற கருவிகளை வாங்கிக்கொடுத்தது மத்திய அரசு தான்” என ஆபரேஷன் சிந்தூர் குறித்து சில தினங்களுக்கு முன்னர் அதிமுகவினை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தது சர்ச்சையானது. ராணுவ வீரர்களை பற்றி அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கருத்து குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் கேட்டதற்கு, “அவர் ஒரு கோமாளி..அவர் பேசியதை எல்லாம் பெரிதுப்படுத்த விரும்பவில்லை” என குறிப்பிட்டார்.

முதலமைச்சர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைப்பயிற்சி மேற்கொண்ட நிலையில், மைதானம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. முதல்வருடன் அவரது துணைவியார் துர்கா ஸ்டாலின், நீலகிரி மக்களவை தொகுதி எம்.பி ஆ.ராசா ஆகியோரும் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.