அரசியல்

பாமக சிறப்புப் பொதுக்குழு.. அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!

பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவில் அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.

பாமக சிறப்புப் பொதுக்குழு.. அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!
A series of allegations against Anbumani
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில சிறப்பு பொதுக்குழுக் கூட்டம், கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தப் பொதுக்குழுவில், கட்சியின் தலைவராக ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், 37 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, அன்புமணி ராமதாஸ் இந்தப் பொறுப்பை வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுக்க ராமதாஸுக்கு முழு அதிகாரம் வழங்கி மற்றொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், பாமகவில் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிக்கையை ஜி.கே.மணி வாசித்தார். அதில், அன்புமணி மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, அவர் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டது.

அன்புமணி மீது வைக்கப்பட்ட முக்கிய குற்றச்சாட்டுகள்:

* 2024 இறுதியில் நடந்த சிறப்புப் புத்தாண்டு கூட்டத்தில், மைக்கைத் தூக்கிப் போட்டுப் பேசியதுடன், பனையூரில் புதிய அலுவலகம் தொடங்கி கட்சியைப் பிளவுப்படுத்த முயன்றது.

* தைலாபுரத்தில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என்று கூறி, 100-க்கும் மேற்பட்டோரை வரவிடாமல் தடுத்தது.

* சமூக ஊடகப் பிரிவினர் சிலரை ஏவி, ராமதாஸ் மற்றும் கட்சி மூத்தவர்கள் மீது அவதூறான செய்திகளைப் பரப்பியது.

* மூத்தவர்கள் முன்னெடுத்த சமாதானப் பேச்சுவார்த்தையை ராமதாஸ் ஏற்றுக்கொண்டபோதும், அன்புமணி தரப்பு அதை உதாசீனப்படுத்தியது.

* தைலாபுரத்தில் ராமதாஸ் இருக்கைக்கு அருகிலேயே ஒட்டுக்கேட்பு கருவியைப் பொருத்தியது.

* ராமதாஸின் அனுமதி இல்லாமல் பொதுக்குழுவைக் கூட்டி, அதில் அவரது புகைப்படத்துடன் ஒரு நாற்காலிக்குத் துண்டு அணிவித்து, 'ராமதாஸுக்கு நல்ல புத்தி கிடைக்க' வேண்டியது.

* ராமதாஸிடம் அனுமதி இல்லாமல், 'உரிமை காக்கும் பயணம்' என்ற நடைப்பயணத்தை மேற்கொண்டது.

* தைலாபுரம் தோட்டத்திற்கு ராமதாஸைச் சந்திக்க வருபவர்களிடம் பணமும் பதவியும் தருவதாகக் கூறி பனையூருக்குக் கடத்திச் சென்றது.

* என்னுடைய பெயர் மற்றும் புகைப்படம் பயன்படுத்தப்படக் கூடாது' என்று ராமதாஸ் வெளிப்படையாகக் கூறியபோதும், அதைக் கொச்சைப்படுத்திப் பேசிவந்தது.

* ராமதாஸ் தொடங்கிய பசுமைத் தாயகம் அமைப்பைத் திட்டமிட்டு அபகரித்தது.

* பாமக தலைமை அலுவலகத்தை, ராமதாஸுக்குத் தெரியாமல் மாற்றியது.

* ராமதாஸ் நீக்கியவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்தது.

* ராமதாஸிடம் எதுவுமே பேசாமல், 40 முறை பேசியதாக பொதுவெளியில் பொய்யுரைத்தது.

* ஜி.கே.மணி, ஆர்.அருள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, கூட்டுப் பிரார்த்தனை செய்வோம் என்று கேலி செய்தது.

* மக்கள் தொலைக்காட்சியில் ராமதாஸ் சம்பந்தமான நிகழ்ச்சிகளை நீண்ட காலமாக ஒளிப்பரப்பாமல், திட்டமிட்டு அதை அபகரித்தது.

இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 8 பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கைக் குழு, பாமக நிறுவனர் ராமதாஸுக்குப் பரிந்துரை செய்துள்ளதாக ஜி.கே.மணி தெரிவித்தார்.