அரசியல்

ஓபிஎஸ் - முதல்வர் சந்திப்பு.. அரசியலாக்குவது நாகரிகமற்ற செயல்- ஓ.பன்னீர் செல்வம்

முதல்வர் ஸ்டாலின் இல்லத்துக்கு சென்றதை அரசியலாக்குவது நாகரிகமற்ற செயல் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் - முதல்வர் சந்திப்பு.. அரசியலாக்குவது நாகரிகமற்ற செயல்- ஓ.பன்னீர் செல்வம்
O.Panneer selvam and CM Stalin
தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் போன்ற கட்சிகள் தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளன. இதற்கிடையில், சமீபத்திய அரசியல் நகர்வுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த மார்ச் மாதம் டெல்லியில் அமித் ஷாவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்த பிறகு, 2023ல் பிரிந்த அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் இணைந்தது. அதே சமயம், சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடியைச் சந்திக்க அனுமதி கேட்டு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார். ஆனால் அவருக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. இதனையடுத்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவித்தது.

ஓபிஎஸ் - முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு குறித்த சர்ச்சை

ஓ. பன்னீர்செல்வம் கூட்டணியில் இருந்து வெளியேறிய அன்றைய தினமே, முதல்வர் ஸ்டாலினை இரண்டு முறை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. இந்தச் சந்திப்புக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் திமுக கூட்டணியில் இணைவாரா என்ற கேள்வியும் எழுந்தது.
இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில், "முதல்வரின் இல்லத்திற்குச் சென்றதை அரசியலாக்குவது நாகரிகமற்ற செயல்" என்று ஓ. பன்னீர்செல்வம் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

ஓபிஎஸ் விளக்க அறிக்கை

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பியவர்களை அவர்களது இல்லம் தேடிச் சென்று நலம் விசாரிப்பதும், உயிரிழந்தவர்களின் உறவினர்களைச் சந்தித்து துக்கம் விசாரித்து அஞ்சலி செலுத்துவதும் தமிழ்ப் பண்பாடு என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வகையில், முதல்வர் ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பல்வேறு சிகிச்சைகளுக்குப் பிறகு பூரண குணமடைந்து இல்லம் திரும்பிய நிலையில், அவரது வீட்டிற்கு நேரில் சென்று நலம் விசாரித்ததாகத் தெரிவித்தார். இதேபோன்று அவரது மூத்த சகோதரர் மு.க. முத்து மறைவு குறித்து இரங்கல் தெரிவித்ததாகவும், இந்தச் சந்திப்பு தமிழ்ப் பண்பாட்டின் வெளிப்பாடு என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

மேலும், தனது மனைவியும், தாயாரும் இறந்தபோது, தன்னை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியவர் முதலமைச்சர் ஸ்டாலின் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தச் சந்திப்பில் எவ்வித அரசியலும் இடம்பெறவில்லை என்பதைத் தெரிவிப்பதாகவும் ஓபிஎஸ் கூறினார்.

ஆனால், இந்தச் சந்திப்பை வைத்து தன்னை திமுகவின் 'B' டீம் என்றும், தான் திமுகவுடன் கூட்டணி வைக்கப் போவதாகவும், திமுகவில் இணையப் போவதாகவும் பல்வேறு வதந்திகளை சமூக வலைத்தளங்கள் வாயிலாகப் பரப்பும் நடவடிக்கைகளைச் சிலர் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார். பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களும் இதுகுறித்த செய்திகளை கற்பனையாக வெளியிட்டு வருகின்றன என்றும், இதில் எள்ளளவும் உண்மையில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

தன்னைப் பொறுத்தவரையில், 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைக்க வேண்டுமென்பதுதான் எங்களின் நோக்கம் என்பதையும், அதற்கான நடவடிக்கைகளை எடுப்போம் என்பதையும் உறுதிபடத் தெரிவித்தார்.