அரசியல்

முதல்வரை நேரில் சந்தித்த OPS மற்றும் பிரேமலதா.. மாறுமா கூட்டணி கணக்கு?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தேமுதிக கட்சி நிர்வாகிகள் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளனர்.

முதல்வரை நேரில் சந்தித்த OPS மற்றும் பிரேமலதா.. மாறுமா கூட்டணி கணக்கு?
O. Panneerselvam and Premalatha's Courtesy Visit to CM Stalin Sparks Alliance Speculation
கடந்த ஜூலை 21 ஆம் தேதி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுத்தொடர்பாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “முதல்வர் தனது வழக்கமான காலை நடைப்பயிற்சியினை மேற்கொண்டிருந்த போது லேசான தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. அதுத்தொடர்பாக பரிசோனை மேற்கொள்வதற்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதல்வருக்கு தேவையான நோயறிதல் பரிசோதனைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என குறிப்பிடப்பட்டிருந்தது.

முதலமைச்சருக்கு ஏற்பட்ட தலைசுற்றல் பிரச்சினை தொடர்பாக க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளில், இதயத்துடிப்பில் உள்ள சில வேறுபாடுகள் காரணமாகவே இந்த தலைசுற்றல் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது.

இதய சிகிச்சை மருத்துவர் Dr.G செங்குட்டுவேலு தலைமையிலான மருத்துவ வல்லுநர் குழுவின் அறிவுரையின்படி, இதனை சரி செய்வதற்கான சிகிச்சைமுறை அப்போலோ மருத்துவமனையில் ஆஞ்சியோகிராம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த 24 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் சோதனையும் இயல்பாக இருந்தது.

இதனைத் தொடர்ந்து, முழுமையாக உடல்நலம் தேறிய முதல்வர் கடந்த ஜூலை 27 ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். மருத்துவர்களின் அறிவுரைக்கு ஏற்ப 3 தினங்கள் ஓய்வில் இருந்த முதல்வர் இன்று மீண்டும் அரசு தொடர்பான நிகழ்வில் பங்கேற்றார்.

முதல்வரை சந்தித்த ஓபிஎஸ்- பிரேமலதா:

இந்நிலையில் இன்று காலை நடை பயிற்சியின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்துள்ளார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அதேப்போல், முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு வருகைத் தந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முதல்வரையும் அவரது குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். இந்த சந்திப்பின் போது துணை முதல்வர் உதயநிதி, தேமுதிகவின் சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.



ஓபிஎஸ் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் முதல்வரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பேசுப்பொருளாகி உள்ளது. யாருடன் கூட்டணி என தேமுதிக முடிவுசெய்யாத நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.