அரசியல்

அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தவர் நேரு.. லால்குடியில் எடப்பாடி பழனிச்சாமி தாக்கு

’அமைச்சர் நேரு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டார். வருகிற சட்டப்பேரவை தேர்தலில், ஸ்டாலினின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்’ என அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் மத்தியில் பேசியுள்ளார்.

அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தவர் நேரு.. லால்குடியில் எடப்பாடி பழனிச்சாமி தாக்கு
Nehru wrote a slavery charter: Edappadi Palaniswami harsh criticism in Lalgudi
திருச்சி: ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப் பயணத்தில், நேற்று திருவெறும்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளைத் தொடர்ந்து, லால்குடி தொகுதியில் திருச்சி சாலையில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.

அவர் பேசுகையில், “லால்குடி நகரமே அதிரும் அளவுக்கு மக்கள் வெள்ளம் இங்கே கூடியிருக்கிறது. அடுத்த ஆண்டு தேர்தலில் இந்தத் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு இந்த கூட்டமே சாட்சி. எழுச்சிப் பயணத்தில் அதிமுக மாபெரும் எழுச்சியைப் பெற்றுள்ளது. இன்று 112-வது சட்டமன்ற தொகுதியாக லால்குடியில் உங்களைச் சந்திக்கிறேன். இதுவரை லால்குடியில் அதிமுக கூட்டத்தில் இவ்வளவு மக்கள் கூடியது கிடையாது.

இது விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. நானும் ஒரு விவசாயிதான். இரு தரப்பு மக்களுக்கும் பல்வேறு திட்டங்களை நாங்கள் கொடுத்தோம். அதிமுக ஆட்சியில், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களை இரண்டு முறை தள்ளுபடி செய்தோம். விவசாயிகளுக்காக குடிமராமத்துத் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்மூலம் ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் தூர்வாரப்பட்டு நீர் சேமிக்கப்பட்டது. அதிலிருந்து கிடைத்த வண்டல் மண் விவசாயத்துக்குப் பயன்பட்டது. ஒருபுறம் ஏரிகள் ஆழமாயின, மறுபுறம் விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கிடைத்தது.”

குடும்பத்துக்காக அரசியல் செய்யும் திமுக:

”லால்குடி பகுதியில் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும், வீரர்களுக்கு பாதுகாப்பு உதவிகள் செய்யப்படும். அதிமுக மக்களுக்காக அரசாங்கம் நடத்தியது. திமுக குடும்பத்துக்காக அரசாங்கம் நடத்துகிறது. எம்.ஜி.ஆர் ஏழைகளுக்காக இந்த இயக்கத்தைத் தொடங்கினார். அம்மாவால் கட்டிக்காக்கப்பட்டது இந்த இயக்கம். இதை வீழ்த்த திமுக பல இடையூறுகளைக் கொடுத்தது. அதிமுகவை உடைக்கப் பலரைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தார் ஸ்டாலின், எவ்வளவோ முயற்சிகள் செய்தும் எதுவும் செய்ய முடியவில்லை. தொண்டர்களால் ஆளக்கூடிய கட்சி அதிமுக. தொண்டர்கள்தான் இயக்கத்தின் உயிர் மூச்சு. எப்படி காற்றைத் தடைபோட முடியாதோ, அதுபோல அதிமுகவைத் தடை போட முடியாது.

எம்.ஜி.ஆர், அம்மாவுக்கு வாரிசு இல்லை, மக்கள்தான் வாரிசு. ஆனால், திமுக குடும்பத்துக்காக இயங்கும் கட்சி. மன்னராட்சியை மீண்டும் கொண்டுவர திமுக துடிக்கிறது. திமுகவில் உழைப்பவர்களுக்கு மரியாதை கிடையாது, கப்பம் கட்டுபவர்களுக்குத்தான் மரியாதை. அதிமுகவில் விசுவாசமாக இருக்கும் தொண்டர் கூட பொதுச்செயலாளர், முதல்வர் ஆக முடியும். திமுகவை கார்ப்பரேட் கம்பெனியாக மாற்றிவிட்டார்கள்” என்றார்.

அடிமை சாசனம் எழுதிக்கொடுத்த நேரு:

”அமைச்சர் நேரு சொல்கிறார், ‘உதயநிதி அல்ல இன்பநிதி வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்’ என்று. அப்படி அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டார். அதிமுகவில் அமைச்சர்கள் திறமையாகச் செயலாற்றியதால் நல்லாட்சி கொடுத்தோம்.

திமுகவில் கப்பம் அதிகம் கட்டுபவர்தான் சிறந்த அமைச்சர். அதிமுக ஆட்சியில் எல்லா துறைகளுமே சிறப்பாக செயல்பட்டன, அதன்மூலம் நூற்றுக்கணக்கான தேசிய விருதுகளைப் பெற்றோம். உள்ளாட்சித்துறையில் மட்டும் 140 தேசிய விருதுகள் பெற்றோம். போக்குவரத்துத் துறை, மின்சாரத்துறை, சமூகநலத்துறை, உயர்கல்வித்துறை எனப் பல துறைகளிலும் விருதுகளைப் பெற்றோம்.

அதுமட்டுமில்லை, இந்தியாவிலேயே தொடர்ந்து 5 முறை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தேசிய விருது பெற்றோம். மேலும், தமிழகத்தில் அதிக உணவு தானிய உற்பத்தியைப் பெருக்கி, தேசிய அளவில் ஐந்து ஆண்டுகள் கிருஷி கர்மா என்ற உயரிய விருதைப் பெற்ற அரசு அதிமுக அரசு. அதிமுக ஆட்சியில் கை இல்லாத ஒருவருக்கு இரண்டு கைகளையும் பொருத்திக் கொடுத்தோம். ஆனால், திமுக ஆட்சியில் காலோடு போனால் உயிர் இல்லாமல்தான் திரும்பி வரமுடியும்” என திமுகவினை கடுமையாக தாக்கி பேசினார் எடப்பாடி பழனிச்சாமி.