விளையாட்டு

தென்னாப்பிரிக்கா டி20 லீக் ஏலம்: பெயரை ரிஜிஸ்டர் செய்த 13 இந்திய வீரர்கள்

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் SA20 டி20 லீக்கின் நான்காவது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க, பியூஷ் சாவ்லா, சித்தார்த் கவுல் மற்றும் அங்கித் ராஜ்பூட் உட்பட 13 இந்திய வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

தென்னாப்பிரிக்கா டி20 லீக் ஏலம்: பெயரை ரிஜிஸ்டர் செய்த 13 இந்திய வீரர்கள்
SA20 Auction: 13 Indian Players Register for Fourth Season
ஐபிஎல் தொடர்களுக்கு கிடைத்த வரவேற்பினைத் தொடர்ந்து ஒவ்வொரு நாடும் தங்களுக்கென டி20 பிரிமீயர் லீக் தொடரை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், தென்னாப்பிரிக்கா டி20 லீக் இதுவரை 3 சீசன்கள் வெற்றிகரமாக நடைப்பெற்றுள்ள நிலையில் நான்காவது சீசன் வருகிற டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி தொடங்க உள்ளது.

இதற்கு முன்னதாக, வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறவுள்ள ஏலத்திற்காக மொத்தம் 784 வீரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர். பிசிசிஐ விதிமுறைகளின்படி, இந்திய வீரர்கள் அனைவரும் சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் ஆகியவற்றில் இருந்து ஓய்வு பெற்றவர்களாக அல்லது இனிமேல் விளையாடப் போவதில்லை என அறிவித்தவர்களாக இருக்க வேண்டும். அந்த வகையில், 13 இந்திய வீரர்கள் ஏலத்திற்காக தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர். அவர்களின் விவரம் பின்வருமாறு-

மகேஷ் அஹிர் (குஜராத்), சாருல் கன்வர் (பஞ்சாப்), அனுரீத் சிங் கதுரியா (டெல்லி), நிகில் ஜகா (ராஜஸ்தான்), முகமது ஃபைத் (மாநிலம் குறிப்பிடப்படவில்லை), கே.எஸ். நவீன் (தமிழ்நாடு), அன்சாரி மாரூஃப் (மாநிலம் குறிப்பிடப்படவில்லை), இம்ரான் கான் (UPCA), வெங்கடேஷ் கலிபெல்லி (மாநிலம் குறிப்பிடப்படவில்லை), மற்றும் அதுல் யாதவ் (UPCA) ஆகியோரைத் தவிர சாவ்லா (UPCA, இந்தியா), கவுல் (பஞ்சாப்) மற்றும் ராஜ்பூட் .

வீரர்களின் அடிப்படை விலை?

பியூஷ் சாவ்லாவின் அடிப்படை விலை 10,00,000 ராண்ட் (இந்திய மதிப்பில் சுமார் 50 லட்சம்) ஆகவும், இம்ரான் கானின் அடிப்படை விலை 5,00,000 ராண்ட் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற இந்திய வீரர்களின் அடிப்படை விலை 2,00,000 ராண்ட் (10 லட்சம்) ஆகும். தென்னாப்பிரிக்கா டி20 லீக் தொடரில் இதற்கு முன் விளையாடிய ஒரே இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் மட்டுமே. தென்னாப்பிரிக்கா டி20 லீக் தொடரில் மொத்தம் 6 அணிகள் மோதவுள்ளன. நடப்புத் தொடருக்காக ஏலத்தின் வாயிலாக மொத்தம் 84 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

பாகிஸ்தான் வீரர்கள் ஏலம் எடுக்கப்படுவார்களா?

ஏலப் பட்டியலில் அஸாம் கான், இமாம்-உல்-ஹக், அப்ராஹர் அஹமது மற்றும் சயிம் அயூப் உட்பட 40 பாகிஸ்தான் வீரர்களும் உள்ளனர். இருப்பினும், இவர்கள் ஏலத்தில் எடுக்கப்படுவது கேள்விக்குறிதான் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதற்கு காரணம், தென்னாப்பிரிக்கா டி20 லீக் தொடரில் விளையாடும் 6 அணிகளின் உரிமையாளர்களும் இந்தியாவினை சார்ந்தவர்கள். இதுவரை நடைப்பெற்று முடிந்துள்ள 3 சீசனிலும், இந்த ஆறு SA20 அணிகளும் இதுவரை பாகிஸ்தான் வீரர்களைத் தங்கள் அணியில் சேர்த்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ் உட்பட 150-க்கும் மேற்பட்ட இங்கிலாந்து வீரர்களும் இந்த ஏலப்பட்டியலில் உள்ளனர். நான்காவது சீசன் டிசம்பர் 26 அன்று தொடங்கி ஜனவரி 25 வரை நடைபெறும். கடந்த சீசனின் சாம்பியன் எம்ஐ கேப்டவுன் அணி என்பது குறிப்பிடத்தக்கது.