அரசியல்

பழைய ஓய்வூதிய திட்டம்.. உரிய நேரத்தில் முடிவு.. தங்கம் தென்னரசு பதில்

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான கோரிக்கையில் உரிய நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

பழைய ஓய்வூதிய திட்டம்.. உரிய நேரத்தில் முடிவு.. தங்கம் தென்னரசு பதில்
பழைய ஓய்வூதிய திட்டம்.. உரிய நேரத்தில் முடிவு.. தங்கம் தென்னரசு பதில்
தமிழக சட்டப்பேரவை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. அப்போது மறைந்த கத்தோலிக்க மதத் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வினாக்கள் – விடைகள் நேரத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் மரகதம் குமரவேல், அரசு ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அரசின் நிலைப்பாடு என்ன ? அது எப்போது நிறைவேற்றப்படும் என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது, அரசு ஊழியர்கள் நலனில் அக்கறை கொண்டிருக்கும் முதலமைச்சரின் ஒப்புதலை பெற்று நிதிநிலை அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருப்பதாக கூறினார். மேலும், பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ககன் தீப்சிங் பேடி தலைமையில் குழு அமைக்கப்பட்டிருக்கதாகவும், அந்த குழு அரசு ஊழியர்கள் சங்கங்களிடம் கருத்துக்களை கேட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து, அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக உரிய நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும் எனவும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். திமுக தனது தேர்தல் வாக்குறுதியின் போது அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.